/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை...களை கட்டுது! கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
/
மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை...களை கட்டுது! கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை...களை கட்டுது! கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையத்தில் காய்கறி விற்பனை...களை கட்டுது! கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
ADDED : டிச 23, 2024 05:50 AM

மேட்டுப்பாளையம்: கிறிஸ்துமஸ் பண்டிகை, களை கட்டியதை அடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இவற்றின் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட் மற்றும் உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள், இங்கு வருகின்றன.
குஜராத், இந்துார், ஆக்ரா, கர்நாடகா கோலார், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், விற்பனை செய்யப்படுகின்றன. இதில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் கேரளா மாநிலத்துக்கு, 50 சதவீதம் செல்கின்றன.
வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா என வீடுகளில் இனிப்புகள் செய்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு மக்கள் வழங்குவது வழக்கம். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விருந்து சமையலும் நடக்கும்.
வரத்து அதிகரிப்பு
மேட்டுப்பாளையம் மார்க்கெட் மற்றும் மண்டிகளில் இருந்து கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்குகள் வாங்க கேரளா வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
உருளைக்கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், 'ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து நேற்று அதிகரித்தபோதிலும் விலை வீழ்ச்சியடையவில்லை.
45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ.1700 முதல் ரூ.1900 வரை விற்பனை ஆனது. கேரளா வியாபாரிகள் உருளைக்கிழங்கு வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்' என்றனர்.
இன்னும் விலை உயரும்
பண்டிகை காலம் முடியும் வரை விலை உயர வாய்ப்புள்ளது. நேற்றை தினம் கேரட் ஒரு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 முதல் 80 வரை; பீட்ரூட் ரூ.40 முதல் 70 வரை; முட்டைகோஸ் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை ஆகின. இன்னும் விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
- ராஜா, -காய்கறி வியாபாரி, மேட்டுப்பாளையம்