/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13வது வார்டில் மண் சாலையில் புதையும் வாகனங்கள்
/
13வது வார்டில் மண் சாலையில் புதையும் வாகனங்கள்
ADDED : ஏப் 07, 2025 05:34 AM

மண் சாலையில் புதையும் வாகனங்கள்
ஜி.என்.,மில்ஸ், உருமாண்டம்பாளையம், 13வது வார்டு, சாஸ்திரி நகரில், தார்சாலை அமைத்து தர பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. மண் சாலையில் அடிக்கடி வாகனங்களின் சக்கரங்கள் புதைந்து, சிக்கிக்கொள்கின்றன. மேலும், ஒரு மாதத்திற்கு மேலாக உப்பு தண்ணீரும் வராததால், குடியிருப்புவாசிகள் போதிய தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
- பார்வதி, ஜி.என்.,மில்ஸ்.
நடைபாதை சேதம்
போத்தனுார், ரயில் நிலையம் முதல் ரயில் திருமண மண்டபம் வரை, நடைபாதை சிலாப்புகள் உடைந்துள்ளது. பாதசாரிகள் தடுமாறி விழுகின்றனர். நடைபாதை சிலாப்புகளை விரைந்து சரிசெய்து தர பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- மைக்கேல், போத்தனுார்.
கொசுப்புழுக்கள் உற்பத்தி படுஜோர்
ராமநாதபுரம், சவுரிபாளையம் பிரிவு, சாமநாயுடு லேவுட், அல்வேர்னியா பள்ளி அருகே சாக்கடை கால்வாய் பல வாரங்களாக சுத்தம் செய்யவில்லை. கால்வாயில், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை அடைத்துள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.
- ராஜா, ராமநாதபுரம்.
அடிக்கடி விபத்து
மேட்டுப்பாளையம் ரோடு, பூமார்க்கெட் ரோட்டில், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைக்கின்றனர். கடைகளை தாண்டி, சாலையில் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், கடைகளுக்கு வருவோர் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். போக்குவரத்திற்கு மிகவும் இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.
- பாலமுருகன், ஆர்.எஸ்.,புரம்.
கடும் துர்நாற்றம்
ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட் பகுதியில், சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யவில்லை. கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கேன்கள், கவர்கள் நிரம்பி உள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ராஜா, ஆவாரம்பாளையம்.
நாய்களால் தொல்லை
ஒண்டிப்புதுார், ராமகோஸ்டி மற்றும் எஸ்.எம்.எஸ்., லே-அவுட் தெருவில், தெருநாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளது. கூட்டமாக சுற்றும் நாய்கள் சாலையில் செல்வோரையும், பைக்கில் செல்வோரையும் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் நடந்து செல்லேவே அஞ்சுகின்றனர்.
- முருகன்,
ஒண்டிப்புதுார்.
சாலை நடுவே பைப்
வடவள்ளி, 40வது வார்டு, வி.என்.ஆர்., நகர் ரோடு திருப்பத்தில் சாலை நடுவே குடிநீர் பைப் கேட் வால்வு உள்ளது. சாலையிலிருந்து பைப் அரை அடிக்கு வெளியே நீட்டிக்கொண்டுள்ளது. வாகனங்கள் திரும்பும்போது பைப்பில் மோதி விபத்திற்குள்ளாகின்றனர். இதனால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
- பன்னீர்செல்வம், வடவள்ளி.
சாலையில் ஓடும் கழிவுநீர்
அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி நிறுவனங்கள் சந்திப்பு அருகே சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. பாதசரிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும் போது, நடந்து செல்பவர்கள் மீது தெறிக்கிறது.
- சவுந்தர், பீளமேடு.