/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹோப் காலேஜில் உறுமும் வாகனங்கள்; ரோட்டை கடக்க பதறும் பயணிகள்
/
ஹோப் காலேஜில் உறுமும் வாகனங்கள்; ரோட்டை கடக்க பதறும் பயணிகள்
ஹோப் காலேஜில் உறுமும் வாகனங்கள்; ரோட்டை கடக்க பதறும் பயணிகள்
ஹோப் காலேஜில் உறுமும் வாகனங்கள்; ரோட்டை கடக்க பதறும் பயணிகள்
ADDED : ஜன 24, 2025 11:14 PM
கோவை; கோவை - அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜ் பகுதியில் 'யூ டேர்ன்' வசதி முறையாக செய்து கொடுக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாப் பகுதியில் பயணிகள் ரோட்டை கடக்க, 'ஜீப்ரா கிராஸிங்' கோடு' வரைந்து, பாதுகாப்பாக செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. இடைப்பட்ட பகுதிகளில், வாகனங்கள் திரும்ப 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
ஹோப் காலேஜ் பகுதியிலும், 'யூ டேர்ன்' வசதி இருந்தது. ரயில்வே மேம்பால பகுதியில் துாண்கள் எழுப்பியபோது, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மையத்தடுப்பு கற்கள் வைத்து தடுக்கப்பட்டது. அங்குள்ள சிறிய இடைவெளி வழியாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் திரும்பிச் செல்கின்றனர்.
கார்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் ஜி.ஆர்.ஜி., விடுதி வரை சென்று, 'யூ டேர்ன்' அடித்து, திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதன் காரணமாக, ஜி.ஆர்.ஜி., விடுதி முன், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோல், ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் பயணிகள், எதிர்திசைக்கு ரோட்டை கடந்து செல்ல, மையத்தடுப்பில் இடைவெளி விடப்பட்டிருக்கிறது.
ஆனால், 'ஜீப்ரா கிராஸிங்' கோடு வரையப்பட வில்லை. சிக்னல் வசதியும் செய்யப்படவில்லை. அதன் காரணமாக, பயணிகளால் எளிதில் ரோட்டை கடந்து செல்ல முடிவதில்லை. கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சமயங்களில், வாகனங்களுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாக நுழைந்து செல்கின்றனர்.
மற்ற நேரங்களில் வாகனங்கள் படுவேகமாக சீறிச் செல்கின்றன. அத்தருணங்களில் ரோட்டை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். அதிக பயணிகள் சேர்ந்ததும், கைகளை காட்டி சைகை காண்பித்து, வாகனங்களின் வேகத்தை குறைக்க வைத்து, கடந்து செல்கின்றனர். இது, ஆபத்தையே விளைவிக்கும். போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து, பயணிகளுக்கு போதுமான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

