/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேடு, பள்ளமான சாலை தடுமாறும் வாகனங்கள்
/
மேடு, பள்ளமான சாலை தடுமாறும் வாகனங்கள்
ADDED : மார் 19, 2025 08:55 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உருமாண்டம்பாளையம் ரோடு, கே.என்.ஜி., புதூர் ரோடு ஆகியன குண்டும், குழியுமாக இருப்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவிலிருந்து உருமாண்டம்பாளையம், கே.என்.ஜி., புதுார், கணுவாய், வெள்ளக்கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோட்டில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாததால், அப்பகுதி மேடு, பள்ளமாக உள்ளது.
இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இச்சாலையில் உள்ள குழியை மூட, கோவை வடக்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் என, இரண்டு துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில்,நெடுஞ்சாலை துறையினரும், குடிநீர் வடிகால் வாரியமும் தொடர்ந்து அலட்சிய போக்கில் உள்ளன. இச்சாலையை செப்பனிட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை, என்றார்.