/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் லோடுடன் செல்லும் வாகனங்கள்; பாதுகாப்பு இல்லை
/
கூடுதல் லோடுடன் செல்லும் வாகனங்கள்; பாதுகாப்பு இல்லை
கூடுதல் லோடுடன் செல்லும் வாகனங்கள்; பாதுகாப்பு இல்லை
கூடுதல் லோடுடன் செல்லும் வாகனங்கள்; பாதுகாப்பு இல்லை
ADDED : பிப் 20, 2024 04:59 AM

விதிமீறும் வாகனங்கள்
பொள்ளாச்சி, ஸ்ரீனிவாசபுரம் பாலம் அருகே உள்ள ரோட்டில் செல்லும் வாகனங்கள் முறையாக விதியை பின்பற்றாமலும் ஆபத்தை உணராமலும் கூடுதலாக லோடு ஏற்றி எந்த பாதுகாப்பு இல்லாமல் செல்கிறது. இதனால் வாகனத்தின் பின் பகுதியில் இருக்கும் நபர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதால், போக்குவரத்து துறை அதிகாரிகள் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - - ரஞ்சித், பொள்ளாச்சி.
நிழற்கூரை வருமா
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால் பயணியர் நீண்ட நேரம் வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் சோர்வு அடைகின்றனர். இதை தவிர்க்க, இங்கு நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கண்ணன், கோவில்பாளையம்.
ரோடு மோசம்
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 7வது வார்டில் மணியம்மை வீதியில் உள்ள தார் ரோடு தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இன்னும் சீரமைக்காமல் உள்ளது. இவ்வழியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்க சிரமம் ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - மஜீத், சூளேஸ்வரன்பட்டி.
கழிப்பிடம் வருமா
கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் பொதுக்கழிப்பிட வசதி போதிய அளவு இல்லாததால், அப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், இங்கு உள்ளவர்கள் பொது வெளியை அதிகம் பயன்படுத்துவதால், அப்பகுதியினர் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு கூடுதல் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.
- - மனோஜ், நெகமம்.
துார்வார வேண்டும்
உடுமலை ராஜலட்சுமிநகர் செல்லும் மழைநீர் கால்வாய் துார்வாரப்படாததால், குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்லாமல் அடைத்துக்கொள்கிறது. எனவே, கால்வாயை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
மண் குவியல்
உடுமலை, பழநி ரோடு, கழுத்தறுத்தான் பள்ளத்தில், வடிகாலுக்காக தோண்டப்பட்ட மண் ரோட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இம்மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
மின் விளக்கு ஒளிருமா
கிணத்துக்கடவு, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஆங்காங்கே ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் ரோட்டில் செல்லும் பயணியர் அச்சப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி இங்கு உள்ள மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - சசி, கிணத்துக்கடவு.
விபத்து அபாயம்
உடுமலை, பசுபதி வீதி மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாவதற்கு முன்பே பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் அவ்வழியாக சென்று வருகின்றனர். ஆபத்தை உணராமல் செல்வதால் விபத்து ஏற்படும் சூழலும் அதிகரித்துள்ளது. போலீசார் இதை கட்டுப்படுத்த வேண்டும்.
- சூர்யா, உடுமலை.
சேதமடைந்த நெடுஞ்சாலை
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மோசமான ரோட்டினால் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் அதிகமாக தடுமாறி விழுகின்றனர்.
- விஜயன், உடுமலை.
தெருவிளக்குகள் தேவை
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் தெருவிளக்குள் போதிய அளவு இல்லை. இதனால் மாலை நேரங்களில் அவ்வழியாக மக்கள் செல்ல முடியாத வகையில் இருள் சூழ்ந்துள்ளது. பெண்கள் அப்பகுதியை கடந்து செல்வதற்கு பாதுகாப்பில்லாத நிலையாக உள்ளது. அப்பகுதியில், நகராட்சியினர் தெருவிளக்குகளை அமைக்க வேண்டும்.
- செந்தில், உடுமலை.
நகராட்சி கவனத்துக்கு
உடுமலை, நேரு வீதி எக்ஸ்டன் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள ரோட்டின் ஆள் இறங்கு குழிகளை முறையாக சமன்படுத்தாமல் உள்ளனர். இதனால் புதிதாக அவ்வழியாக செல்வோர் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துக்குள்ளாகின்றனர். நகராட்சியினர் இதை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாணி, உடுமலை.
பராமரிக்க வேண்டும்
உடுமலை நகராட்சி ஸ்ரீ நகர் பூங்கா பராமரிப்பில்லாமல், செடிகள், கொடி வளர்ந்து புதர் மண்டிக்காணப்படுகிறது. இதனால், பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, இப்பூங்காவை சீரமைத்து, அழகுபடுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.

