/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா
/
வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா
ADDED : செப் 19, 2024 06:39 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில், ஆடம்பர தேர்பவனி நடந்தது.
மேட்டுப்பாளையம் -காரமடை சாலையில், சிவன்புரம் அருகே அற்புதகெபி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இதன் தேர்த்திருவிழா கொடியேற்றம் கடந்த, 6ம் தேதி நடந்தது. கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், கொடியேற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். 12ம் தேதி வரை மாலை, 5:30 மணிக்கு செபமாலையும், சிறப்புத் திருப்பலிகளும் நடந்தன.
15ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஜீவஜோதி ஆசிரம இயக்குநர் பாதிரியார் ஆண்டனி இயேசுராஜ், 11:00 மணிக்கு பாதிரியார் ஆண்டனி வினோத் ஆகியோர் விழா திருப்பலியை நிறைவேற்றினர். மாலை, 5:30 மணிக்கு பாதிரியார் ஆனந்த் குமார் தலைமையில், பாதிரியார்கள் அன்னைக்கு நன்றி திருப்பலியை நிறைவேற்றினர்.
பின்பு மாலை, 7:00 மணிக்கு கப்பல் வடிவில் செய்த அன்னையின் ஆடம்பரத் தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட மாதாவின் தேர்பவனி, மேட்டுப்பாளையம் சாலையில், மீனாட்சி பஸ் ஸ்டாப் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. முடிவில், நற்கருணை இறையாசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.