/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கட வு பொன்மலை கோவிலில் வேலாயுத சுவாமி அருளாட்சி
/
கிணத்துக்கட வு பொன்மலை கோவிலில் வேலாயுத சுவாமி அருளாட்சி
கிணத்துக்கட வு பொன்மலை கோவிலில் வேலாயுத சுவாமி அருளாட்சி
கிணத்துக்கட வு பொன்மலை கோவிலில் வேலாயுத சுவாமி அருளாட்சி
ADDED : ஏப் 10, 2025 09:49 PM

கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் அமைந்துள்ளது பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில், புரவிபாளையம் ஜமீன்தாராக இருந்தவர் சந்திர கோபண்ண மன்றாடியார்.
இவர், தீவிர முருக பக்தர். இவர் முருக பெருமானை தரிசிக்க விரதம் இருந்து, பழநி மலை செல்வது வழக்கம். முருகனை தரிசிக்க யாத்திரை மேற்கொள்ளும் போது, வழித்தடத்தில் ஆயக்குடி ஜமீன், ஊர் மக்களுடன் நின்று, புரவிபாளையம் ஜமீனை சந்தித்து, விருந்தோம்பலுக்கு அழைத்துள்ளார்.
பழநி சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பும்போது விருந்து சாப்பிடலாம் என கேள்வி எழுப்பி, விருந்து சாப்பிட மறுப்பு தெரிவித்த புரவிபாளையம் ஜமீனை, பழநி செல்லவிடாமல் ஆயக்குடி ஜமீன் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
பல நாட்கள் விரதம் இருந்து, முருகப்பெருமானை தரிசிக்கும் ஆர்வத்தில் இருந்த அவர், மன வேதனையுடன் புரவிபாளையம் திரும்பினார். சுவாமி தரிசனம் செய்ய முடியாதை நினைத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றைய தினம் சந்திர கோபண்ண மன்றாடியார் கனவில் முருகப்பெருமான் தோன்றி, “நீ என்னை தரிசிக்க பழநி செல்ல வேண்டாம். உனக்காகவும், பக்தர்களுக்காவும் பொன்மலையில் எனது பாதத்தை விட்டு சென்றுள்ளேன். அங்கு வந்து தரிசனம் செய்,'' என, அருள்கூறியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
கண்ட கனவு உண்மையா, இல்லையா, என குழப்பம் அடைந்து, முருகன் மீது உள்ள பக்தியால், பொன்மலையை கண்டு பிடித்து, முருகப்பெருமான் பாதத்தை தேடிய போது, சந்தன மரத்தின் அடியில் முருகப்பெருமான் பாதம் இருப்பதை கண்டார். மேலும், அதன் அருகில் பொன் விளைந்திருப்பதையும் கண்டு பக்தியில் மெய் மறந்தார். இதை உலகறிய செய்ய இந்த குன்றில் முருகர் சிலை வடிவமைத்து கோவில் கட்டினார்.
அன்றில் இருந்து, பொன் (கனகம்) விளைந்த மலையில் (கிரி) காட்சியளித்த முருகப்பெருமானை, பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி ஸ்தலமாக போற்றி, பக்தர்கள் வணங்குகின்றனர்.
குழந்தை ஊனமின்றி ஆரோக்கியமாக பிறக்கவும், உடலில் உள்ள நோய் நீங்கவும் பொன்மலை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
அரிது... அரிது... மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது...
என, அவ்வையார் பாடியது பொன்மலை கோவிலுக்கு பொருந்துகிறது என்கின்றனர் முருக பக்தர்கள்.
பூஜை நேரங்கள்
பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், நாள்தோறும் காலை 6:00 முதல் மதியம் 12:30 வரையும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரையும் பூஜைகள் நடக்கிறது.
கோவிலில், வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில், காலை 10:00 மணிக்கு, பால் பூஜை நடக்கும். மேலும், ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கிருத்திகை தினத்தன்று, காலை, 10:00 மணிக்கு பால் பூஜை, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றி சுவாமி கிரிவலம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. வளர்பிறை சஷ்டி நாளன்று, மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.

