வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் விவகாரம்; தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பினர் மனு
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் விவகாரம்; தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பினர் மனு
ADDED : அக் 09, 2024 12:21 AM
கோவை : 'வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தேர்தலுக்கு முன் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, கோயமுத்துார் தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கப்பட்டது. 40 சதவீத பணிகள் நடந்துள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் சிறு சிறு வேலைகள் செய்யப்பட்டன.
2022 பிப்., 10ல் நிறுத்தப்பட்டு விட்டது. அதன்பின், பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி கைவிடப்பட்டுள்ளது. அவ்வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கட்டடத்தில் உள்ள கம்பிகள், ஏனையப் பொருட்கள் களவாடப்படுகின்றன.
கோவை தெற்கு பகுதிக்கு எவ்வித திட்டங்களையும் அரசு செய்யவில்லை; இப்பகுதி வளராமல் குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறது; நொந்து கிடக்கிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தால் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறைந்திருக்கும்.
இப்பகுதியில் இருந்து, எல் அண்டு டி புறவழிச்சாலை ஒரு கி.மீ., துாரத்தில் இருக்கிறது; தற்போது அமைக்கப்படும் 'ரிங் ரோடு' ஓரிரு கி.மீ., துாரத்தில் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனும் அருகாமையில் உள்ளது.
அனைத்து விதத்திலும், இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைப்பது சாலச்சிறந்தது. தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிதி ஒதுக்கி வரும் தேர்தலுக்கு முன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
