/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டுக்கு நிதி.. வேண்டும் ரூ.84 கோடி! அரசின் காழ்ப்புணர்வால் அதோ கதி
/
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டுக்கு நிதி.. வேண்டும் ரூ.84 கோடி! அரசின் காழ்ப்புணர்வால் அதோ கதி
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டுக்கு நிதி.. வேண்டும் ரூ.84 கோடி! அரசின் காழ்ப்புணர்வால் அதோ கதி
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டுக்கு நிதி.. வேண்டும் ரூ.84 கோடி! அரசின் காழ்ப்புணர்வால் அதோ கதி
ADDED : செப் 20, 2024 10:33 PM

கோவை : 'வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.84 கோடி விடுவிக்கவில்லை' என, மாநகராட்சி தலைமை பொறியாளர் தெரிவித்திருக்கிறார். முந்தைய ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டம் என்பதால், ஆளும் தி.மு.க., அரசு காழ்ப்புணர்வு காண்பிப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.168 கோடியில் வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கப்பட்டது. உக்கடத்தில் இருந்து இப்பகுதிக்கு எளிதாக செல்வதற்காக, 'மெட்ரோ ரயில்' திட்டத்தில், 'லிங்க்' கொடுக்க ஆலோசிக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, காலியிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பஸ்கள் நிறுத்துவதற்கு 'ரேக்'குகள் அமைக்கப்பட்டன. நுழைவாயில் டிசைன் தயாரிக்கப்பட்டது.
2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது; மூன்று ஆண்டுகளாக இத்திட்டம் முடங்கியிருக்கிறது.
இப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் கட்டினால், கோவையின் தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும் என்பதால், வெள்ளலுார் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு உருவாக்கப்பட்டது.
இக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், கட்டுமான பணியை தொடர்ந்து நடத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதற்கு மாநகராட்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, பதில் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி, 100வது வார்டில் ரூ.168 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு, 2019ல் தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. இதில், 84 கோடி ரூபாய் தமிழக அரசு மானியம், 84 கோடி ரூபாய் மாநகராட்சி பங்களிப்பாக நிதி பங்கீடு செய்ய உத்தரவிடப்பட்டது.
மாநகராட்சிக்குச் சொந்தமான, 61.81 ஏக்கரில் பஸ் ஸ்டாண்ட் கட்ட உத்தேசிக்கப்பட்டது; கட்டுமான பணிகள் 37 சதவீதம் முடிந்திருக்கிறது. மாநகராட்சி பங்களிப்பு தொகையில் ரூ.52.46 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழக அரசு மானியம் ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்யவில்லை. இவ்விவரங்கள் அனைத்தும் கலெக்டர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மூலமாக, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அறிவுரை வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.