/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுஞ்சோலையாக மாறுகிறது வெள்ளலுார் குப்பை கிடங்கு : மாநகராட்சி சாதிக்கிறது 'சிறுதுளி'யுடன் கைகோர்த்து
/
பசுஞ்சோலையாக மாறுகிறது வெள்ளலுார் குப்பை கிடங்கு : மாநகராட்சி சாதிக்கிறது 'சிறுதுளி'யுடன் கைகோர்த்து
பசுஞ்சோலையாக மாறுகிறது வெள்ளலுார் குப்பை கிடங்கு : மாநகராட்சி சாதிக்கிறது 'சிறுதுளி'யுடன் கைகோர்த்து
பசுஞ்சோலையாக மாறுகிறது வெள்ளலுார் குப்பை கிடங்கு : மாநகராட்சி சாதிக்கிறது 'சிறுதுளி'யுடன் கைகோர்த்து
ADDED : நவ 11, 2025 11:03 PM

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள், 18 முதல் 20 அடி உயரத்துக்கு நன்கு வளர்ந்து பசுஞ்சோலையாக காணப்படுகிறது.
கோவை நகர்ப்பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கரில் கொட்டப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர், காற்று மாசுபட்டிருக்கிறது. துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்ற, பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக, 68.25 ஏக்கரில் தேங்கியிருந்த பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் கையாண்டதில், 50 ஏக்கர் மீட்கப்பட்டது. துர்நாற்றம் வீசுவதை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சாலையின் இருபுறமும், 800 மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 'சிறுதுளி' அமைப்புடன் கைகோர்த்து, 10 ஏக்கரில் மரக்கன்றுகள் நடும் பணி, ஏப்., 8ல் துவக்கப்பட்டது. 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு, மர வேலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, மாநகராட்சி சார்பில் 15 ஏக்கரில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ராஜமுந்திரியில் இருந்து மருதம், புங்கன், வேம்பு, பூவசரன், இலுப்பை மற்றும் வாகை உள்ளிட்ட 64 வகையான நாட்டு ரக மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்காகவும் கிடங்கு வளாகத்தில் செயற்கை குட்டை உருவாக்கப்பட்டு, உக்கடத்தில் இருந்து சுத்திகரித்த கழிவு நீர் 'பம்ப்' செய்யப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
ஏழு மாதங்களில் 18 முதல் 20 அடி உயரத்துக்கு மரங்கள் நன்கு வளர்ந்து, பசுஞ்சோலை போல், அப்பகுதி காணப்படுகிறது.

