/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க தலைவர்களுக்கு வாய்மொழி உத்தரவு :மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
/
பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க தலைவர்களுக்கு வாய்மொழி உத்தரவு :மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க தலைவர்களுக்கு வாய்மொழி உத்தரவு :மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க தலைவர்களுக்கு வாய்மொழி உத்தரவு :மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
ADDED : ஜூன் 03, 2024 11:18 PM
மேட்டுப்பாளையம்:வருகிற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு, பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும்படி, ஊராட்சி தலைவர்களுக்கு, அரசு அதிகாரிகள் வாய் மொழியாக கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டு கிராம ஊராட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றன. இவர்களின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து தமிழக அரசு, கிராம ஊராட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் 2022ம் ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தமிழக அரசு தேர்தலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதிக்குள்
இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அரசு தீர்மானித்துள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரிய ஊராட்சிகளை இரண்டாகப் பிரிக்கவும், நகராட்சி, பேரூராட்சி எல்லை அருகே உள்ள, ஊராட்சி பகுதிகளை, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இது குறித்து, பெரிய அளவில் உள்ள ஊராட்சிகளை, இரண்டாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றும்படி, ஊராட்சித் தலைவர்களுக்கு, அரசு அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பெரிய அளவில் உள்ள ஊராட்சிகளை இரண்டாக பிரித்து, 13 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கி, மொத்தம், 30 ஊராட்சிகள் ஏற்படுத்த வேண்டும். தற்போது காரமடை ஒரே ஊராட்சி ஒன்றியமாக உள்ளதை, காரமடை கிழக்கு, மேற்கு ஒன்றியம் என இரண்டு ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட உள்ளது.
மக்களிடம் கருத்து
மேலும் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள ஊராட்சிகளின் குடியிருப்பு பகுதிகளை நகராட்சி, பேரூராட்சி உடன் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. எனவே தங்களின் ஊராட்சி மன்ற கூட்டத்தில், இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பும்படி, ஊராட்சி தலைவர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: ஒரு ஊராட்சியை இரண்டாக பிரிப்பது என்றால், அதற்கு முதலில் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை அடுத்து அரசாணை வழங்க வேண்டும். அந்த அரசாணையில் ஊராட்சியின் எல்லைகள் பிரித்து, ஊராட்சியின் தலைமையிடம் எது எனவும் அறிவிக்க வேண்டும். அதன் பின்பும் பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் அரசாணை ஏதும் இல்லாமல் அதிகாரிகள், வாய்மொழியாக ஊராட்சியை இரண்டாக பிரிப்பது குறித்து, மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும்படி கூறியுள்ளனர்.
மேலும் நகராட்சி, பேரூராட்சி அருகே உள்ள ஊராட்சி பகுதிகளையும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி உடன் இணைப்பதாகவும் கூறியுள்ளனர். அதிகாரிகள் கூறுவது உண்மையா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அரசு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு உண்மையாக இருப்பின், அதற்கு அரசாணை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஊராட்சித் தலைவர்கள் கூறினர்.