/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடுகளுக்கு பெரியம்மை நோய் கால்நடை துறை அறிவுரை
/
மாடுகளுக்கு பெரியம்மை நோய் கால்நடை துறை அறிவுரை
ADDED : ஏப் 29, 2025 11:30 PM
பெ.நா.பாளையம், ; மாடுகளுக்கு பெரியம்மை நோய் வராமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கால்நடை துறை, அறிவுரை வழங்கி உள்ளது.
பசு மாடுகளில் பெரியம்மை என்பது ஒரு நச்சுயிரி நோயாகும். இந்நோய் மாடுகளில் ஈ, கொசு போன்ற கடிக்கும் பூச்சிகள் வாயிலாக பரவக்கூடிய வைரஸ் நோயாகும்.
கடிக்கும் பூச்சிகள், உண்ணிகள் மற்றும் கொசுக்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து, மற்ற மாடுகளுக்கு பரவுகிறது.
நோயற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் வாயிலாகவும் பரவுகிறது. நோயுள்ள தாய் பசுவிடமிருந்து, கன்றுக்கு பரவுகிறது.
இந்த நோய்கள் வராமல் இருக்க, அம்மை தடுப்பூசி ஆண்டுதோறும் ஒரு முறை போட வேண்டும். பண்ணையின் சுத்தம் மற்றும் சுகாதாரம் மிகவும் முக்கியம்.
இந்நோய் ஏற்பட்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மூலிகை மருத்துவம் வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து தேவையான அளவு நாக்கினில் தடவி கொடுக்க வேண்டும்.
காயத்திற்கான வெளிப்பூச்சு மருந்து குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி, மஞ்சத்தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து, 500 மி.லி., நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து, கொதிக்க வைத்து பின்னர் ஆறவிட்டு, காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும். காயத்தில் புழுக்கள் இருப்பின், சீதாப்பழ இலை அரைத்து காயத்தில் தடவ வேண்டும் அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தில் விட்டு, புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் மருந்து போடவும் என, கோவை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.

