/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் காலி.. பாதிக்கு பாதி! உடனடியாக நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
/
கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் காலி.. பாதிக்கு பாதி! உடனடியாக நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் காலி.. பாதிக்கு பாதி! உடனடியாக நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் காலி.. பாதிக்கு பாதி! உடனடியாக நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2025 05:27 AM
பொள்ளாச்சி: தேர்வாணையம் வாயிலாக கால்நடை ஆய்வாளர் பணியிடம் நிரப்பும் உத்தரவால், கிளை நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தற்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவில் பாதி அளவிலேயே ஆய்வாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில், கால்நடைத்துறை வாயிலாக கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி செலுத்துதல், நோய் பாதிப்பு சிகிச்சை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, கோட்ட அளவில், கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், உதவி டாக்டருக்கு அடுத்த நிலையில் முதலுதவி சிகிச்சை, செயற்கை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், கால்நடை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கால்நடை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர்.
கடந்த காலங்களில், பிளஸ் 2 முடித்தபின், நேரடியாக துறைக்கு விண்ணப்பித்து, கால்நடை ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இப்பணிக்கான நியமனம், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொள்ளாச்சி கோட்டத்தில், மொத்தம், 14 கிளை நிலையங்கள் உள்ள நிலையில், 7 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
கால்நடை ஆய்வாளர் நிலை - 2 பணியாளர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில், பிளஸ் 2 முடித்த பின், நேரடியாக துறைக்கு விண்ணப்பித்து, நியமனம் செய்யப்பட்டனர்.
அதன் அடிப்படையில், கடந்த 2012ல், கால்நடை ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டது. அதன்பின், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக ஆய்வாளர்களை தேர்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதால், இதுவரை, ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சிகிச்சை முறையில் பாதிப்பு ஏற்படாதவாறு, கால்நடை டாக்டர்கள், கால்நடை உதவியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனி வரும் நாட்களில், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால், ஆய்வாளர் பணியிடம் காலியாக வாய்ப்பும் உள்ளது. ஆய்வாளர்கள் பணியின் தன்மை அறிந்து உடனடியாக பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

