ADDED : ஜன 17, 2026 05:26 AM

நெகமம்: நெகமம் சுற்றுப்பகுதியில் இருக்கும் நீரோடை ஓரத்தில், கால்நடை மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
நெகமம் அருகே தேவணாம்பாளையத்தில் இருந்து வகுத்தம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் நீரோடை உள்ளது. இதன் ஓரத்தில், அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பை மற்றும் கால்நடை மருத்துவ கழிவு அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, நீர் தேங்கிய இடத்திலும் காலி மருந்து பாட்டில்கள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நீர் மாசுபடுகிறது.
இதே போன்று, பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் இருந்து மூட்டாம்பாளையம் செல்லும் ரோட்டோரம் நீரோடையில் பிளாஸ்டிக் பைகள், சி.டி., பழைய பொருட்கள் வீசப்படுள்ளது. ஆங்காங்கே மூட்டை மூட்டையாக குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மாசடைந்துள்ளது.
இந்த நீர் வழிப்பாதை ஓரத்தில் இரு புறமும் அதிகளவில் தென்னை விவசாயம் உள்ளது. மாசடைந்த நீரால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது மட்டுமின்றி ரோட்டோரத்தில் கால்நடை மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தங்கள் கால்நடைகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இங்கு உள்ள காலி கண்ணாடி மருந்து பாட்டில்களை மிதிக்கும் கால்நடைகளுக்கு காயம் ஏற்படுகிறது.
எனவே, நீரோடை ஓரத்தில் இருக்கும் குப்பை மற்றும் கால்நடை மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
