/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளை அறிய வேழம் இயலியல் பூங்கா
/
யானைகளை அறிய வேழம் இயலியல் பூங்கா
ADDED : மார் 27, 2025 11:23 PM

மேட்டுப்பாளையம்: யானைகளின் குணாதிசயங்கள், அவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், வேழம் இயலியல் பூங்கா என்ற சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் வனத்துறை மர கிடங்கு உள்ளது. இந்த வளாகத்தில், வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020-21ம் துவங்கப்பட்டது. பாதி பணிகளுக்கும் மேல் நிறைவடைந்த நிலையில், பூங்கா பணிகள் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டன.
தற்போது மீண்டும் ரூ.14 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கியதை அடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறை நிர்வாகம் சார்பில் பணிகள் மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறியதாவது:- இந்த பூங்காவின் உள்ளே, பல்வேறு இன யானைகளின் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்கள், அந்த இனங்களின் வாழ்விடம், வாழ்ந்த காலம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு, காட்சிப்படுத்தும் பணி நடக்கிறது.
பண்டையக் காலத்தில் யானைகள் எதற்கெல்லாம், பயன்படுத்தப்பட்டன, இலக்கியம் மற்றும் நமது கலாசாரத்தில் யானைகளின் பங்கு எவ்வாறு இருந்தது என்பது பற்றியும் ஓவியங்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யானைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, விழிப்புணர்வு மையம் மற்றும் திறந்தவெளி விளக்கப் பூங்கா, மையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்கா முழுமைபெற்றவுடன், பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் திறந்து விடப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

