/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நிலை தொட்டியில் மலக்கழிவா வீடியோ வைரலால் பரபரப்பு
/
மேல்நிலை தொட்டியில் மலக்கழிவா வீடியோ வைரலால் பரபரப்பு
மேல்நிலை தொட்டியில் மலக்கழிவா வீடியோ வைரலால் பரபரப்பு
மேல்நிலை தொட்டியில் மலக்கழிவா வீடியோ வைரலால் பரபரப்பு
ADDED : ஜூலை 10, 2025 10:19 PM
போத்தனுார்; கோவை, போத்தனுார் அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சியின், 9வது வார்டுக்குட்பட்டது சமத்துவபுரம். இங்கு 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்தொட்டி, அம்ருத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தொட்டியில் நீர் ஏற்றப்பட்டது. பிரதான குழாய் இணைப்புகளில் நீர் கசிவு உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை வார்டு கவுன்சிலர் சாந்தியின் (காங்கிரஸ்) கணவர் நடராஜை, அம்ருத் திட்ட மேற்பார்வையாளர் கோவிந்த் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொட்டியின் மேற்பகுதியில் மனித மலக்கழிவு உள்ளதாக, தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற நடராஜ் அதனை வீடியோ எடுத்து, வாட்ஸ் ஆப்பில் ''மற்றொரு வேங்கைவயல் சம்பவம் நடக்க கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என பதிவிட்டார். வீடியோ வைரல் ஆகி, பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த செட்டிபாளையம் போலீஸ் தனிப்பிரிவு போலீஸ்காரர் அங்கு சென்று ஆய்வு செய்த போது, அது பெயின்ட் என்பது தெரிந்தது.
பேரூராட்சி தலைவர் ரங்கசாமி(தி.மு.க) கூறுகையில், 'இவ்வார்டில், எம்.பி. நிதியில் பஸ் ஸ்டாப் ஒன்று கட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டில் வார்டு கவுன்சிலர் பெயர் இல்லை.
இதுகுறித்து கவுன்சிலரின் கணவர் பதிவு ஒன்று போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மலக்கழிவு இருப்பதாக கூறியிருப்பது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த செய்ததாக இருக்கலாம்'' என்றார். கவுன்சிலர் சாந்தியின் கணவர் நடராஜ் கூறுகையில், ''அம்ருத் திட்ட பணி மேற்பார்வையாளர் கோவிந்த் என்னை காலை, 11:45 மணியளவில் தொடர்பு கொண்டு மலக்கழிவு இருப்பதாக கூறினார்.
அங்கு சென்று வீடியோ எடுத்து, பேரூராட்சி கவுன்சிலர்கள் குழுவில் பதிவிட்டேன். பஸ் ஸ்டாப் கல்வெட்டில் பெயர் இல்லாததற்காக இதை செய்யவில்லை.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பதிவிட்டேன்,'' என்றார்.