/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளாங்குறிச்சி ரோடு... அப்பப்பா பெரும்பாடு!
/
விளாங்குறிச்சி ரோடு... அப்பப்பா பெரும்பாடு!
UPDATED : டிச 01, 2025 08:40 AM
ADDED : டிச 01, 2025 05:29 AM

மா நகராட்சி கிழக்கு மண்டலம், 24வது வார்டானது நேரு வீதி, ஜெகநாதன் நகர், ஸ்ரீ நகர், ஆர்.கே.எஸ்.நகர், சாஸ்திரி வீதி, பி.ஆர்.புரம், என்.ஆர்.ஐ.கார்டன் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அவிநாசி ரோட்டில் இருந்து சத்தி ரோட்டுக்கு செல்வதற்கான இணைப்பு சாலையாக, தண்ணீர் பந்தல் ரோடு உள்ளது.சேரன் மாநகர், கணபதி மாநகர், விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல, இது பிரதானமாக இருப்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. செப்., முதல் வாரத்தில், தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பாலப் பணி மீண்டும் துவங்கியது.
வார்டில் தீர்க்கப்படாத பல பிரச்னைகளை சுட்டிக்காட்டும் பொதுமக்கள், முக்கியமாக ரயில்வே மேம்பால பணிகளை முதலில் முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிடப்பில் 32 ஏக்கர் திருப்பதி வெங்கடாசலபதி நகர் மனை, வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பக்தவத்சலம் கூறுகையில், ''கொடிசியா எதிரே வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 32 ஏக்கர் நிலம் உள்ளது. 2021ல் குடிநீர் குழாய் பதித்தல், தண்ணீர் தொட்டிகள், சாக்கடை கால்வாய் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கின. அதன்பின் கிடப்பில் போடப்பட்டதால், அங்கு குப்பை கொட்டுகின்றனர். இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கொடிசியாவுக்கு முதல்வர் வருகைக்காக போடப்பட்ட ரோடு, ஒரு வாரத்தில் பெயர்ந்து விட்டது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது,'' என்றார்.
வேகம் தேவை லட்சுமி நகரையொட்டி செல்லும் தண்ணீர் பந்தல் ரோட்டின், பக்கவாட்டில் செல்லும் சாக்கடை கால்வாய் 'ஓபன்' ஆக உள்ளது. குப்பையை இதில் கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது. மழை காலங்களில் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது. இங்கு நடந்துவரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வழித்தடம் மூடப்பட்டுள்ளதால், கொடிசியா ரோடு சென்று சத்தி ரோட்டை அடைய வேண்டியுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் தாமதமின்றி பணிகளை முடிக்க வேண்டும். -கணேசன் ஆட்டோர் டிரைவர்.
தொடர் விபத்து வி.கே.ஆர். நகர் வளைவில், இரவில் விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆட்டோவில் பயணிக்கும் கர்ப்பிணியர் எங்களிடம், 'ரோடு பிரச்னைக்கு விடிவே கிடையாதா?' என, புலம்பித்தீர்க்கின்றனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. விளாங்குறிச்சி ரோட்டில் மட்டும் இந்தாண்டு, 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். வி.கே.ஆர்., நகர் முடிவில் விளாங்குறிச்சியில் இருந்து வந்து குப்பையை வீசிச்செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் 'சிசிடிவி' கேமரா பொருத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம் செயலாளர், ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிற்சங்கம்.
போராட்டமேதீர்வு சேரன் மாநகரில் நாய் தொல்லை அதிகம். வினோபாஜி நகரில் குப்பை எடுப்பதில்லை; சாக்கடை அள்ளவும் துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. புழு உற்பத்தியாகி, கொசு, துர்நாற்றம் பிரச்னைகளை சந்திக்கிறோம். இங்குள்ள இரண்டாவது வீதியில், இரண்டு துருப்பிடித்த தெரு விளக்குகள் சாய்ந்துவிட்டன. மோசமான நிலையில் இருக்கும் கம்பங்களை அகற்ற வேண்டும். நாங்கள் போராட்டம் நடத்தியே, மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அவலம் உள்ளது. -மீராபாய், இல்லத்தரசி.
கட்டுப்பாடு தேவை விளாங்குறிச்சி ரோட்டில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. 30, 40 டன் என அதிக பாரங்கள் ஏற்றிவருவதால், ரோடு தாங்குவதில்லை. தரமான ரோடு அமைத்தால் மட்டுமே தாக்குப்பிடிக்கும். அதேபோல், அழுத்தம் காரணமாக இந்த ரோட்டில் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. ரோட்டில் இருந்து பறக்கும் துாசு, சுவாச கோளாறு பிரச்னையை ஏற்படுத்துகிறது. கண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. 'பீக்' நேரங்களில்தான் ரோட்டில் எந்த வேலையும் செய்கின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். -செல்வகுமார், டூ வீலர் மெக்கானிக்.

