/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையுடன் சேர்க்க கிராம மக்கள் கோரிக்கை
/
கோவையுடன் சேர்க்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 03, 2025 09:16 PM
அன்னுார்; கோவையுடன் சேர்க்க கோரி, பொங்கலூர் ஊராட்சி மக்கள், 16 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில், இருந்து, கடந்த, 2009 பிப்ரவரியில் திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவானது. அப்போது அவிநாசி தாலுகாவிலிருந்து, அன்னுார் ஒன்றியம், கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
இதில் அன்னுாரை ஒட்டியுள்ள பொங்கலூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. கோவையிலிருந்து, சத்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அன்னுாரில் இருந்து 8வது கி.மீட்டரில் பொங்கலூர் உள்ளது. இந்த ஊராட்சியில் பொங்கலூர், மொண்டிபாளையம், தாசராபாளையம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்கள் உள்ளன. 8,000 பேர் வசிக்கின்றனர்.
பொங்கலூர் மக்கள் கூறியதாவது :
எங்கள் ஊர் கோவை --சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தொழில், கல்வி என அனைத்திலும் கோவையை சார்ந்து உள்ளது. தற்போது தாலுகா அலுவலகத்திற்கு அவிநாசியும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திருப்பூரும் செல்ல மூன்று பஸ்கள் மாற வேண்டி உள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கு சேவூர் செல்லவும் நேரடி பஸ் வசதி இல்லை.
'எங்கள் ஊராட்சியை கோவையுடன் சேர்க்க வேண்டும்,' என்று கோரி எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்வர் என பலருக்கும் 16 ஆண்டுகளாக மனு அனுப்பி வருகிறோம்.
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, திருப்பூர் கலெக்டருக்கும், கோவை கலெக்டருக்கும் அனுப்பினோம். பொங்கலூர் ஊராட்சியிலும் எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் எங்கள் கோரிக்கையை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பொங்கலூர் ஊராட்சி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முக்கியமான இரு கட்சிகளும் உறுதி அளித்தன.
எனினும் தேர்தல் முடிந்து நான்காண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. விரைவில் எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும்
இவ்வாறு, பொங்கலூர் ஊராட்சி மக்கள் தெரிவித்தனர்.