ADDED : பிப் 25, 2024 11:27 PM
சூலுார்:கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டதில், குடியிருப்புகளுக்கு செல்லும் ரோடுதுண்டிக்கப்பட உள்ளது. அதனால், அப்பகுதிகளுக்கு செல்ல சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும், என, சின்னியம்பாளையம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சின்னியம்பாளையம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, சுற்றுவட்டார பகுதிகளில், 629 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், சூலுார் ஒன்றியம், சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதியில் பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பல வீடுகள், தோட்டத்து சாளைகள், விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் ரோடு துண்டிக்கப்பட உள்ளது.
இதனால், குடியிருப்பு பகுதிகள், தோட்டத்து சாளைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களுக்கு செல்ல பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டும். அதனால், அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்காக, சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
