ADDED : ஆக 28, 2026 05:32 PM
அன்னுார்: மூன்று கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் இயக்க கோரி, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்னுாரில் இருந்து தாசபாளையம், சாலைப்பாளையம், சாணாம்பாளையம் வழியாக, அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என, மூன்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக, அன்னுார் அரசு போக்குவரத்துக் கழக கிளையிலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். தொகுதியை சேர்ந்த த.வெ.க., எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான கமலியிடமும் மனு அளித்தனர். எனினும், எந்த நடவடிக்கையும் இல்லை.
கஞ்சப்பள்ளி கிராம சபை கூட்டத்திலும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று, அன்னுார் பயணியர் மாளிகை முன், மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் சமூக ஆர்வலர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
‘மூன்று கிராமங்கள் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கினால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 கிராம மக்கள் பயன் பெறுவர். விரைவில் அரசு டவுன் பஸ் இந்த வழித்தடத்தில் இயக்காவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தனர்.
