sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விதிமீறல் வணிகக் கட்டடத்துக்கு 'சீல்': கோவை மாநகராட்சியில் அதிரடி!

/

விதிமீறல் வணிகக் கட்டடத்துக்கு 'சீல்': கோவை மாநகராட்சியில் அதிரடி!

விதிமீறல் வணிகக் கட்டடத்துக்கு 'சீல்': கோவை மாநகராட்சியில் அதிரடி!

விதிமீறல் வணிகக் கட்டடத்துக்கு 'சீல்': கோவை மாநகராட்சியில் அதிரடி!

1


ADDED : ஜன 20, 2024 02:27 AM

Google News

ADDED : ஜன 20, 2024 02:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது சிறப்பு நிருபர்-

கோவை நகரில், பல ஆண்டுகளுக்குப் பின், விதிமீறி கட்டப்பட்ட வணிகக் கட்டடத்தின் மீது, மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து 'சீல்' வைத்துள்ளது.

கோவை நகரம், வேகமாக வளர்ந்து வரும் நிலையில், குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவற்றுக்கு திட்ட அனுமதி பெறுவதற்கு, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதுடன், பரப்பளவு மற்றும் பட்ஜெட்டுக்கேற்ப லஞ்சமும் தர வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, பலர் திட்ட அனுமதி பெறாமலும், வாங்கிய அனுமதிக்கு மாறாகவும் கட்டடம் கட்டுகின்றனர். குடியிருப்புகளைப் பொருத்தவரை, இதனால் பெரியளவில் பிரச்னை ஏற்படுவதில்லை. ஆனால் வணிகக் கட்டடங்களை, அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டும்போது, பல விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, 'பார்க்கிங்' இடங்களை வணிகப்பகுதியாக மாற்றுவதால், ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பக்கத்திறவிடம், தரைதளக்குறியீடு போன்ற விதிகளைக் கடை பிடிக்காமல் கட்டடம் கட்டுவதால், தீ விபத்து உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்போது, உயிர்கள் மற்றும் உடைமைகளைக் காப்பதும் சிரமமாகவுள்ளது. கடந்த 2019ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில், அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களைத் தடுக்கவே சில நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன.

ஐகோர்ட் உத்தரவு


அதன்படி, பெரிய குடியிருப்புகள் மற்றும் வணிகக்கட்டடங்களுக்கு, உரிய அதிகார அமைப்பிடமிருந்து கட்டட நிறைவுச் சான்று இருந்தால் மட்டுமே, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். இதன்படி, தமிழகத்தில் பல ஆயிரம் கட்டடங்களுக்கு, மின் இணைப்பு பெற முடியாத நிலையும் தொடர்கிறது.

ஆனால் இதையும் மீறி, பல வணிகக் கட்டடங்கள், அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்படுகின்றன. இவற்றின் மீது, கோவை மாநகராட்சி அதிகாரிகள், பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை. பெயரளவுக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டு, அதன்பின் தொடர் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்து விடுகின்றனர்.

இதனால், கோவை நகருக்குள் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு வழக்கில், 'அனுமதியற்ற கட்டடம் கட்டுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவையில், அனுமதியற்ற கட்டடம் மீது, மாநகராட்சி நிர்வாகம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை, இடையர் வீதியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என 3,821 சதுர அடி பரப்பு கட்டடத்துக்கு அனுமதி வாங்கி விட்டு, கீழ்தளம் மற்றும் இரண்டு தளங்கள் என மூன்று தளங்களில், 11 ஆயிரத்து 528 சதுர அடி பரப்புக்கு, 19 அறைகளுடன் வணிகக் கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அவற்றில், பல அறைகள், தங்க நகை தயாரிப்புக்கான தொழிற்கூடங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

கலக்கம்


இதையறிந்த மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரிகள், அந்த கட்டடத்துக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அங்கிருந்த தொழிற்கூடங்களை காலி செய்ய அவகாசம் தரப்பட்டது. கோவை மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையில், உதவி நகர அமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஊழியர்கள், நேற்று காலையில் அந்த கட்டடத்தை மூடி 'சீல்' வைத்தனர்.

விதிமீறல் கட்டடம் என்பதற்கான அறிவிப்பையும் அங்கு ஒட்டினர். பல ஆண்டுகளுக்குப் பின்பு, கோவையில் விதிமீறல் வணிகக் கட்டடம் மீது எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, விதிகளை மீறி வணிகக் கட்டடம் கட்டியுள்ள பலருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, 'பார்க்கிங்'கை வணிகப்பகுதியாக மாற்றிய கட்டடங்களுக்கும் 'சீல்' வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us