/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறல் கட்டட வரன்முறை திட்டம் முடக்கம்: பணமாவது திரும்ப கிடைக்குமா என எதிர்பார்ப்பு
/
விதிமீறல் கட்டட வரன்முறை திட்டம் முடக்கம்: பணமாவது திரும்ப கிடைக்குமா என எதிர்பார்ப்பு
விதிமீறல் கட்டட வரன்முறை திட்டம் முடக்கம்: பணமாவது திரும்ப கிடைக்குமா என எதிர்பார்ப்பு
விதிமீறல் கட்டட வரன்முறை திட்டம் முடக்கம்: பணமாவது திரும்ப கிடைக்குமா என எதிர்பார்ப்பு
ADDED : ஜன 29, 2026 04:56 PM
சென்னை: தமிழகத்தில், 2017ல் அறிவிக்கப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது; இதில் விண்ணப்பித்தோர் கட்டணமாக செலுத்திய பணமாவது திரும்ப கிடைக்குமா என காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி, அதிக எண்ணிக்கையில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை இடித்து சரி செய்யும் நடவடிக்கையை, அரசு எடுத்து இருக்க வேண்டும்.
ஆனால், நகர், ஊரமைப்பு சட்டத்தில், '113 சி' என்ற புதிய பிரிவை சேர்த்து, அதன் அடிப்படையில் கட்டடங்களை வரன்முறைப்படுத்த, அரசு திட்டமிட்டது. இதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, விதிமீறல் கட்டடங்களை, குறிப்பிட்ட சில நிபந்தனைகள் அடிப்படையில், கட்டணங்கள் வசூலித்து வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க, முதலில் ஆறு மாதம் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின், இந்த அவகாசம், ஆறு முறை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, அவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு வழங்குவது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் முடிவு எடுக்காமல் இருக்கின்றனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை முடிக்க, தமிழக அரசு ஆர்வம் காட்டாமல் உள்ளது. அதேநேரம் இதில் பயன் பெற, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். இந்த வகையில், 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
குறைந்தபட்ச விதிமீறல்கள் உள்ள கட்டடங்களை வரன்முறைப்படுத்தலாம். கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தொடர்பான வழக்கை முடிக்க, தற்போதைய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது, அமலில் உள்ள கட்டட விதிகள் அடிப்படையில், இந்த கட்டடங்களில் காணப்படும் விதிமீறல்களை ஆய்வு செய்து, தகுதி அடிப்படையில் வரன்முறை செய்யலாம். அப்பட்டமாக விதிமீறல் உள்ள கட்டடங்களை வரன்முறை செய்ய முடியாது.
இந்த கட்டடங்களை பாதுகாப்பதற்காக, இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் அதிகாரிகள் முடக்குகின்றனர். திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றால், விண்ணப்பங்களை நிராகரித்து, பதிவு கட்டணங்களை திருப்பி கொடுக்க வேண்டும்.
இதில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

