/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவாரியில் விதிமீறல்; கனிம வளத்துறையினர் ஆய்வு
/
குவாரியில் விதிமீறல்; கனிம வளத்துறையினர் ஆய்வு
ADDED : ஜூலை 18, 2025 09:23 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் உள்ள கல்குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில், அரசுக்கு சொந்தமான பாறையை குணசேகரன், ரத்தினசாமி, பஞ்சலிங்கம், சிவப்பிரகாஷ் ஆகிய நான்கு நபர்கள் குத்தகைக்கு எடுத்து, கல்குவாரி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பது குறித்து, மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் பல முகாம்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட போது, கற்கள் சிதறி அருகிலுள்ள வீட்டின் மீது விழுந்தது. அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் முருகானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவாரி மீது நடவடிக்கை எடுத்து, மூட வேண்டும் என, மனு அளித்தார்.
இதையடுத்து, நேற்று மாலை, கனிமவளத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் வருவாய் துறையினர், குவாரி மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டை ஆய்வு செய்தனர்.
இதில், வீட்டை ஆய்வு செய்த பின், கனிமவளத் துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட நபரிடம் இனிமேல் இது போன்று நடக்காத படி குவாரி நிர்வாகத்திடம் எச்சரிக்கை விடுக்கப்படும், பாதுகாப்பான முறையில் குவாரியை இயக்க அறிவுறுத்தப்படும், என, மனுதாரரிடம் தெரிவித்தனர்.
கனிவளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குவாரியை ஆய்வு செய்ததில், அதிகளவு பணியாட்களை கொண்டு கற்கள் வெட்டி எடுக்கின்றனர். குறைந்த அளவு மட்டுமே வெடி வைக்கப்படுகிறது. பாதுகாப்பான முறையில் குவாரியை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

