/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் விதிமீறல்; புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை
/
அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் விதிமீறல்; புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை
அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் விதிமீறல்; புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை
அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் விதிமீறல்; புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை
ADDED : ஜூன் 11, 2025 07:37 PM

கோவை; வீடில்லாத ஏழைகளுக்கும், குடிசை வீடுகளில் வசிப்போருக்கும் வழங்குவதற்காக கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கோவை கீரணத்தத்தில், 47,193 சதுர அடி பரப்பளவில், தரைதளம் தவிர மூன்று தளங்களுடன், 40 பிளாக்குகளில் 1,280 வீடுகள் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நீர்நிலை புறம் போக்கில் வசிப்போர், வீடற்ற ஏழை மக்கள், குடிசைகளில் வசிப்போருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தற்போது ஏழை மக்களாக இருந்தாலும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை பெற்றுக்கொண்டே வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இங்கு கோவை மாநகராட்சியில் பணிபுரியும், நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் நிர்வாகப்பணியாளர்கள் சிலருக்கு, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதே போல் சொந்தமாக கணவன், மனைவி பெயரில் வீடு இல்லாதவர்களுக்கே, வீடுகளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் வீடு உள்ள வசதியானவர்கள் பலருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி ஆதாரங்களுடன் கீரணத்தத்தில் உள்ள, காந்திநகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கத்தினர், கலெக்டரிடம் புகார் செய்தனர். ஆனாலும் இது குறித்து எந்த விசாரணையோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து காந்திநகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்க நிர்வாகி இளங்கோவன் கூறியதாவது:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் எந்த முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.
வீடில்லாத ஏழைகளுக்காக கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பில் பலரும் வீடுகளை வாங்கி, அதை வாடகைக்கு விட்டு, வருவாய் ஈட்டி வருகின்றனர்.
அரசுப்பணியில் இருப்பவர்களும் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.