/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலையில் விதிமீறல்; வாகனங்களால் விபத்து அபாயம்!
/
நான்கு வழிச்சாலையில் விதிமீறல்; வாகனங்களால் விபத்து அபாயம்!
நான்கு வழிச்சாலையில் விதிமீறல்; வாகனங்களால் விபத்து அபாயம்!
நான்கு வழிச்சாலையில் விதிமீறல்; வாகனங்களால் விபத்து அபாயம்!
ADDED : அக் 08, 2024 12:23 AM

விதிமுறை மீறும் வாகனங்கள்
உடுமலை - -பழநி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில், விதிமுறைகளை மீறி வாகனங்கள் வந்து திரும்புகின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்திரன், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் வழியில், ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் அக்கழிவுகளை தொடர்ந்து உட்கொள்கிறது. இதனால் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- ராதிகா, உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்திக்கொள்கின்றன. இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் போகிறது. மாலை நேரங்களில் ரோட்டின் பாதி வரை நிற்கும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- தருண்குமார், உடுமலை.
வீணாகும் குடிநீர்
கொங்கல்நகரத்தில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், ரோடு பாதிக்கப்படுகிறது. வாகனங்களும் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
சேதமடைந்த ரோடு
மலையாண்டிகவுண்டனுார் அருகே, பள்ளிவலசு கிராமத்தில் அங்கன்வாடிக்கு செல்லும் ரோடு மோசமாக உள்ளது. மழைநாட்களில் மழைநீர் தேங்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதற்கு பெற்றோர் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைப்பதற்கு ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜன், மலையாண்டிகவுண்டனுார்.
மக்கள் பாதிப்பு
உடுமலை, சீனிவாசா வீதியில் பண்டிகை நாட்களையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் வாகனங்களும் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படுகின்றன. வணிக கடைகளுக்கு வருவோர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கே முடியாமல் திணறுகின்றனர். போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்த வேண்டும்.
- வாசன், உடுமலை.
ரோட்டில் கால்நடைகள்
வால்பாறையில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் அவ்வப்போது கால்நடைகள் உலா வருகின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதுடன், அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே, ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -தாரணி, வால்பாறை.
மேம்பாலத்தில் சேதம்
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது, சப்தத்துடன் அதிர்கிறது. இப்பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, இரும்பு சட்டங்களை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.
- மனோஜ், பொள்ளாச்சி.
புதரை அகற்றுங்க!
கிணத்துக்கடவு கூட்டுறவு வங்கி சுற்றுச்சுவர் அருகே அதிக அளவு செடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவு வருகின்றனர். புதர்களால் பூச்சி தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, வங்கி நிர்வாகம் சார்பில் புதரை அகற்றம் செய்ய வேண்டும்.
-- -கண்ணையன், கிணத்துக்கடவு.
கோவை ரோட்டோரம் குப்பை
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், அரசம்பாளையம் பிரிவு அருகே ரோட்டோரத்தில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் போது காற்றுக்கு குப்பை பறந்து, வாகன ஓட்டுநர்கள் மீது விழுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு கொட்டப்படும் குப்பையை அகற்ற வேண்டும்.
-- -மதிவாணன், கிணத்துக்கடவு.
சந்தை பகுதி சுத்தமாகுமா?
நெகமம் வார சந்தை நடக்கும் இடத்தின் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பை கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் குப்பையை சுத்தம் செய்யவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -கிரி, நெகமம்.
பைக்குகளால் அபாயம்
பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தி, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டிருந்தாலும், பைக்குகளில் செல்வோர், ரோட்டோரத்தை கடைபிடிக்காமல், ரோடு முழுக்க தாறுமாறாக வளைந்து, நெளிந்து செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பைக் ஓட்டுநர்களுக்கு போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் அறிவுறுத்த வேண்டும்.
-- அன்புச்செல்வன், பொள்ளாச்சி.
பள்ளி சுவரில் போஸ்டர்
பொள்ளாச்சி நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியின் சுவரில், ஆளும்கட்சி விளம்பர போஸ்டர் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ளது. இதனால், மற்ற அமைப்புகளும் போஸ்டர் ஒட்டும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளியில் ஒட்டப்பட்ட போஸ்டரை அகற்றம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -ராஜ், பொள்ளாச்சி.