/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்கவால் குரங்குகள் விசிட்; அதிருப்தியில் மக்கள்
/
சிங்கவால் குரங்குகள் விசிட்; அதிருப்தியில் மக்கள்
ADDED : அக் 16, 2024 08:55 PM

வால்பாறை : வால்பாறை குடியிருப்பு பகுதியில் முகாமிடும் சிங்கவால் குரங்குகளால் மக்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக, வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் அதிக அளவில் உள்ளன.
புதுத்தோட்டம், குரங்குமுடி, சின்கோனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இவை, வனப்பகுதியில் கிடைக்கும் பழங்களை உணவாக உட்கொள்கின்றன.
புதுத்தோட்டம் பகுதியில் மட்டும், 150க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன. இவை ரோட்டில் துள்ளி விளையாடும் போது, விபத்து ஏற்படாமல் இருக்க, வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஐந்து இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக சிங்கவால் குரங்குகள் புதுத்தோட்டம் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும், வால்பாறை நகரில் உள்ள வீடு மற்றும் கடைகளில் முகாமிட்டு, உணவு பொருட்களை உட்கொள்கின்றன.
இதனால், வீடுகளில் கதவு, ஜன்னல்களை கூட திறந்து வைக்க முடியாத நிலையில், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிங்கவால் குரங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிங்கவால் குரங்குகளுக்கு தேவையான உணவு வனப்பகுதியில் போதிய அளவு கிடைக்கிறது. மக்கள் உட்கொள்ளும் உணவை, அவைகளும் உட்கொண்டு பழகியதால், அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது.
வீடு மற்றும் கடைகளுக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகளுக்கு, பொதுமக்கள் உணவு பொருட்களை வழங்காமல் இருந்தாலே, அவை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாது,' என்றனர்.
மாணவர்கள் தவிப்பு
வால்பாறை நகரில் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும் போது, சிங்கவால் குரங்குகள் பள்ளி வளாகத்தில் முகாமிடுகிறது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து உணவு உட்கொள்ளாமல் வகுப்பறையை பயன்படுத்துகின்றனர்.
சில நேரங்களில் மாணவர்கள் எடுத்துச்செல்லும் உணவினை தட்டிபறிக்கும் சம்பவமும் நடப்பதால், அச்சத்துடன் மதிய உணவு சாப்பிடும் நிலை உள்ளது.