ADDED : மார் 18, 2026 09:02 PM

சூலுார்: சூலுார் சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலில் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டு சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓட்டுப்பதிவை அதிகரிக்க வேண்டும், என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதை ஒட்டி, தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூலுார் மற்றும் சிங்காநல்லுார் தொகுதிக்கு கிருஷ்ணா ஆதித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
சூலுார் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் தேர்தல் பார்வையாளர் தலைமையில் நேற்று நடந்தது. சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் தொகுதியில் உள்ள வாக்காளர்கள், ஓட்டு சாவடிகள் குறித்த விபரங்களை தெரிவித்தனர்.
தேர்தல் பார்வையாளர் பேசியதாவது: கடந்த தேர்தலை விட ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு குறைவாக இருந்த ஓட்டுச்சாவடிகள் உள்ள பகுதிகளில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கு அதிகளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
ஓட்டு சாவடி மைய அலுவலர்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்கள், கோரிக்கைகள் அளிக்க விரும்புவோர், கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உள்ள பயணியர் விடுதிக்கு, காலை, 11:00 முதல், 12:00 மணிக்குள் நேரில் அளிக்கலாம். தொகுதி தொடர்பான புகார்களை, 94438 61262 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
