/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா நகருக்கு விட்டாச்சு பஸ்; போக்குவரத்து கழகம் ஏற்பாடு
/
அண்ணா நகருக்கு விட்டாச்சு பஸ்; போக்குவரத்து கழகம் ஏற்பாடு
அண்ணா நகருக்கு விட்டாச்சு பஸ்; போக்குவரத்து கழகம் ஏற்பாடு
அண்ணா நகருக்கு விட்டாச்சு பஸ்; போக்குவரத்து கழகம் ஏற்பாடு
ADDED : செப் 04, 2025 11:12 PM

தொண்டாமுத்துார்; கெம்பனுார் அண்ணா நகருக்கு, '21 பி' என்ற வழித்தட எண்ணுள்ள அரசு பஸ் இயக்கப்பட்டு, தீண்டாமை புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொண்டாமுத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட, கெம்பனுார் அண்ணா நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்துக்கு, 21, 21பி, 94ஏ, 64டி என்ற வழித்தடம் எண் கொண்ட 4 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில், 21 என்ற வழித்தட எண் கொண்ட அரசு பஸ் மட்டும், ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள் பகுதிக்கு வராமல், கெம்பனுார் ஊருக்குள்ளேயே திரும்பிச் செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தெற்கு ஆர்.டி.ஓ. ராம்குமார், இரு முறை நேரில் விசாரணை நடத்தினார்.
கெம்பனுார் மக்கள் கூறுகையில், 'கெம்பனுாருக்கு இயக்கப்படும் 4 பஸ்களில், 3 பஸ்கள் அண்ணா நகர் சென்று திரும்புகின்றன. எங்கள் பகுதியில் உள்ள முதியவர்களுக்கு, சீட் கிடைக்காமல், நின்று செல்ல வேண்டியுள்ளது.
அதனால், நான்கு பஸ்களில், 21 என்ற பஸ் மட்டும் எங்கள் பகுதியில் நின்று செல்கிறது. இந்த பஸ்சையும் அண்ணா நகர் அனுப்பினால், முதியவர்கள், பெண்கள் சீட் கிடைக்காமல் சிரமப்படுவர். இந்த பஸ்சை அனுப்பினால், நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.
அண்ணா நகர் மக்கள் கூறும்போது, 'காலை 10 முதல் மாலை 3.30 மணி வரை, எங்கள் பகுதிக்கு பஸ் வசதி இல்லை. 21 என்கிற எண்ணுள்ள பஸ் வராவிட்டாலும், இடைப்பட்ட நேரத்துக்கு வேறு பஸ் இயக்கினால் போதும்' என்றனர்.
இதையடுத்து, காலை, மாலை நேரத்தை தவிர்த்து, பகல் நேரங்களில் இயக்காமல் இருந்த, '21 பி' வழித்தட எண் கொண்ட பஸ், கூடுதலாக ஒரு முறை வந்து செல்லும் என அதிகாரிகள் கூறினர்.
அதன்படி, பகல் 1 மணிக்கு, அண்ணா நகரில், 21 பி என்ற பஸ் சேவை துவக்கப்பட்டது.
கோவை தெற்கு ஆர்.டி.ஓ. ராம்குமார், பேரூர் தாசில்தார் சேகர், டி.எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர், நேரில் சென்று, கூடுதல் பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.
ஓரிரு நாட்களில், பகல் 1 முதல் 2.30 மணிக்குள் வந்து செல்லும் வகையில், மேலும் ஒரு பஸ் சேவை துவக்கப்படும் என, உறுதியளித்துச் சென்றனர்.