/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
/
வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
ADDED : மார் 20, 2025 05:34 AM
கோவை: பொது சுகாதாரத்துறையின் கீழ், கோவையில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், 65,007 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் ஆண்டு தோறும், இருமுறை வைட்டமின் ஏ திரவம், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது.
இச்சத்து ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கியமானது. இச்சத்து குறைபாடு இருப்பின், வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில், வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிடில், பார்வை இழக்க நேரிடும்.
கோவையில் கடந்த, 17ம் தேதி முதல் இம்முகாம் துவங்கியது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் இலவசமாக போடப்படுகிறது.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், '' இம்முகாம் வரும், 22ம் தேதி வரை (புதன் தவிர்த்து) நடக்கிறது. 2.72 லட்சம் குழந்தைகளுக்கு போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில், 65,007 குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோர், இம்முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், '' என்றார்.