/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் - ஏ திரவம்
/
2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் - ஏ திரவம்
ADDED : அக் 25, 2025 12:49 AM
கோவை: மாநிலம் முழுவதும், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம், வரும் 27ம் தேதி துவங்குகிறது. கோவையில், 2.66 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசியளவில் ஆண்டுதோறும், இருமுறை வைட்டமின் ஏ திரவம், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது.
இச்சத்து, ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கியமானது. இச்சத்து குறைபாடு இருப்பின், வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும்.
கோவையில் வரும், 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை, புதன் கிழமை தவிர்த்து பிற நாட்களில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில், இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''வைட்டமின் - ஏ குறைபாடு அலட்சியம் கூடாது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிடில், பார்வை இழக்க நேரிடும். கோவையில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 89 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

