ADDED : ஜன 15, 2024 09:58 PM

சூலூர்:முத்துக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளியில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத்தின் சார்பில், விவேகானந்தர் ஜெயந்தி விழா, அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இயக்கத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடந்தது. விவேகானந்தர் வேடமணிந்து, அவரது பொன்மொழிகளை உற்சாகமாக அவர்கள் கூறினர்.
மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு மற்றும் பாட்டுப் போட்டி நடந்தது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கட்டுரை, ஓவியம், பேச்சு, பாட்டு போட்டிகள் நடந்தன. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, சமூக ஆர்வலர் விவேகானந்தன் பழனிசாமி பேசுகையில், ஆன்மீகத்தோடு, தேச பக்தியையும் நாட்டு மக்களிடையே வளர்த்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும்.
அவரது கருத்துக்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்ட எதிர்கால சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும், என்றார்.