ADDED : ஏப் 09, 2026 09:11 PM

கோவை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பயன்படுத்த உள்ள பட்டியலில், கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்தபின் வெளியிட்ட துணை பட்டியலில், புதிதாக 29 ஆயிரத்து 796 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இப்பட்டியல் அச்சிடப்பட்டு, அனைத்து சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் தேடுவதற்கு எளிதாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்படும். தகவல் சீட்டு அச்சிடும் பணி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி வாக்காளர்களுக்கான தகவல் சீட்டு அச்சிடப்பட்டு, அனுப்பப்பட்டது. இனி, மற்ற தொகுதிகளுக்கான தகவல் சீட்டு அனுப்பி வைக்கப்படும். ஓட்டுப்பதிவு நாளான 23ம் தேதிக்கு முன் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஒப்படைக்கப்படும். இதை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது.
தகவல் சீட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாக்காளர்களின் விபரம் இடம் பெற்றிருக்கிறது; இம்முறை போட்டோ அச்சிடவில்லை. பாகம் எண், வரிசை எண் பெரிதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுப்போட வேண்டிய இடம், எந்த கட்டடம், ஓட்டுப்பதிவு தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு, கூறினர்.
