ADDED : ஜன 26, 2024 12:34 AM
- நிருபர் குழு -
இந்திய தேர்தல் ஆணையம், ஆண்டுதோறும் ஜன., 25ம் தேதியை, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது.
வாக்காளர் பெயர் சேர்ப்பு, தேர்தலில் ஓட்டு போடுவதன் அவசியம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இளம் வாக்காளர்கள் வாக்களிப்பது நமது கடமை என்பதையும், வாக்களிப்பது அனைவரின் உரிமை என்பதையும் உணர்த்தும் வகையில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், பேரணியை துவக்கி வைத்தார். தாசில்தார் ஜெயசித்ரா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்கள், பேரணியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கினர். முன்னதாக, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும், வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் - 6, வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு படிவம் - 6ஏ , வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க படிவம் 6பி, நீக்கம் செய்ய படிவம் - 7, திருத்தம் செய்தலுக்கு படிவம் - 8, முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், மாற்றுத்திறனாளி விண்ணப்ப படிவங்கள் குறித்து விளக்கப்பட்டன.
விற்க மாட்டோம்!
கல்லுாரி மாணவர்கள் கூறுகையில், 'முதல் முறையாக ஓட்டு போட போகிறோம். எனது ஓட்டை யாருக்காவும் விற்க மாட்டோம். ஒரு முறை ஓட்டு போட பணம் வாங்கினால், ஐந்து ஆண்டுகளுக்கு கேள்வி கேட்க முடியாது. எனவே, ஓட்டை விற்காமல் நல்லவர்களை தேர்வு செய்து ஓட்டளிப்போம்,' என்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாப் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியில், கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் தலைமை வகித்தார். இதில், வருவாய் துறையினர், தாலுகா அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை
வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, தாசில்தார் வாசுதேவன் தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்ல வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
ஓட்டுரிமையை ஒரு போதும் விற்பனை செய்யக்கூடாது. யாரிடரும் பணம் வாங்காமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்களை மாணவர்கள் கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதி வழியாக சென்றனர். பேரணியில் தேர்தல் துணைதாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை
உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தலைமையாசிரியர் சாவித்ரி தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு உறுதிமொழி வாசித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

