ADDED : மார் 19, 2026 06:22 PM
கோவை: கோவை மாவட்டத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 23ல் (திங்கட்கிழமை) சட்டசபை தொகுதி வாரியாக ஒதுக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 3,540 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. தேர்தலுக்கு பயன்படுத்த 8,343 பேலட் யூனிட், 5,200 கன்ட்ரோல் யூனிட், 5,572 விவி பேட் இயந்திரங்கள் 'பெல்' இன்ஜினியர்களால் முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன.
23ம் தேதி பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், பாதுகாப்பு அறை திறக்கப்படும். சட்டசபை தொகுதி வாரியாக அமையும் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, குலுக்கல் முறையில் இயந்திரங்கள் ஒதுக்கப்படும். போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று, அந்தந்த சட்டசபை தொகுதியில் அமைத்துள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டு சீலிடப்படும். அப்பகுதி தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு, 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படும். இம்மையத்தை பார்வையிட தினமும் வருவோர் கையெழுத்திட பதிவேடு பராமரிக்கப்படும்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும். புதிய பேட்டரி பொருத்தி, அனைத்து பட்டன்கள் சரியாக இயங்குகிறதா என, சோதனை முறையில் 1,000 ஓட்டு பதிந்து பார்த்து, அழிக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதும், அவர்களது புகைப்படத்துடன் கூடிய பேலட் ஷீட் அச்சடிக்கப்படும். இம்முறை வேட்பாளரின் கலர் போட்டோ இடம் பெறுகிறது. பேலட் யூனிட்டில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன் கூடிய பேலட் ஷீட் பொருத்தி, இருப்பு வைக்கப்படும். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச் செல்வோம்' என்றனர்.
