/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வில்லங்க சான்று பெற 12 நாட்களாக காத்திருப்பு
/
வில்லங்க சான்று பெற 12 நாட்களாக காத்திருப்பு
ADDED : பிப் 02, 2024 10:47 PM

அன்னுார்:அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மாதம் 22ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை மாவட்ட கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.
விடிய விடிய நடந்த சோதனையில், கணக்கில் வராத, ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், 1974க்கு முந்தைய பத்திரப்பதிவுகளுக்கு வில்லங்கச் சான்று பெறவும், நகல் பெறவும், அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்கள் கடந்த 12 நாட்களாக நடையாய் நடக்கின்றனர். இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், '1975 லிருந்து ஆன்லைன் வாயிலாக வில்லங்க சான்று பெற முடிகிறது. பத்திர நகலும் பெற முடிகிறது.
அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு பதிவாளர் அலுவலகத்தில் கையால் எழுதி வழங்கப்படும் வில்லங்க சான்று மற்றும் நகல் பெறுவதற்காக கடந்த 22, 23, 24ம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை.
வழக்கமாக விண்ணப்பித்தால், அதிகபட்சம் மூன்று நாட்களில் வில்லங்க சான்று மற்றும் நகல் வழங்கப்படும். தற்போது 12 நாட்களாகியும் வழங்கப்படவில்லை. மாவட்ட பதிவு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

