/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாயை சரி செய்ய காத்திருப்பு போராட்டம்
/
குடிநீர் குழாயை சரி செய்ய காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 05, 2024 11:02 PM

சூலுார்:குடிநீர் குழாயை சரி செய்யக் கோரி, அரசூர் ஊராட்சி அலுவலகத்தில் தன்னார்வலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் மாகாளியம்மன் கோவில் அருகில் உள்ள தரைமட்ட தொட்டி அருகே பொது குடிநீர் குழாய் உள்ளது.
சமீப காலமாக இந்த குழாயில் குறைந்த அளவே தண்ணீர் வருவதாக புகார் எழுந்தது. ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அதே ஊரை சேர்ந்த தன்னார்வலர் ரமேஷ்குமார், குடிநீர் குழாயை சரி செய்யக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். குடிநீர் குழாயை சரி செய்யும் வரையில் போராட்டம் தொடரும், என, அவர் கூறினார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 'பிரதான குழாயில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. பொதுக்குழாயில், அதிக தண்ணீர் திறக்கப்பட்டால், பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்படும், என, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.
இதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து இரவில் ரமேஷ்குமார் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

