/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு மருந்து அளிக்கும்போது அளவு மீறினால் ஆபத்து என எச்சரிக்கை
/
குழந்தைகளுக்கு மருந்து அளிக்கும்போது அளவு மீறினால் ஆபத்து என எச்சரிக்கை
குழந்தைகளுக்கு மருந்து அளிக்கும்போது அளவு மீறினால் ஆபத்து என எச்சரிக்கை
குழந்தைகளுக்கு மருந்து அளிக்கும்போது அளவு மீறினால் ஆபத்து என எச்சரிக்கை
ADDED : டிச 13, 2025 05:02 AM
கோவை: குழந்தைகளுக்கு காய்ச்சல் சமயங்களில், மருந்தை கொடுக்கும் போது, 'டோசேஜ்' விழிப்புணர்வு இன்மையால், கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவ மனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக, பெற்றோரை டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
காய்ச்சல் என்றாலே, பாரசிட்டமால் மருந்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுப்பது இயல்பு. குழந்தைகள் உள்ள வீடுகளில் இம்மருந்து, எப்போதும் அத்தியாவசிய மருந்தாக இருக்கும். பாரசிட்டமால், குழந்தைகளின் எடை, உயரம், கிருமி பாதிப்பை பொறுத்து, டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பாரசிட்டமால் மருந்தில், ஒரு எம்.எல்., அளவில் 1 எம்.ஜி., தன்மையும், ஒரு எம்.எல்., மருந்தில் 100 எம்.ஜி., தன்மையும், 5 எம்.எல்., மருந்தில் 120 எம்.ஜி., அதே 5 எம்.எல்., மருந்தில் 250 மற்றும் 500 எம்.ஜி., மருந்தின் தன்மையும் இருக்கும் வகையில், வேறுபாடுகள் உள்ளன.
இதையறியாமல், பெரிய குழந்தைக்கு வாங்கியதை, சின்னக்குழந்தைக்கு கொடுப்பதும், அளவை மாற்றி கொடுப்பதும், அபாயங்களை ஏற்படுத்திவிடும் என்கிறார், இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் சங்க தமிழக தலைவர் ராஜேந்திரன்.
அவர் கூறியதாவது:
சுயமாக காய்ச்சல், இருமல் மருந்துகளை வாங்கி கொடுப்பது தவறு. பாரசிட்டமால் மருந்து அளவு, நேரம் மாறாமல் கொடுக்க வேண்டும். வேறு பிரச்னைக்கான மருந்தை மாற்றிக்கொடுத்து, ஒரு குழந்தை மூளை உள்ளிட்ட பிற உறுப்புகள் பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது போல், மருந்து அளவு மாற்றிக்கொடுத்து எங்கள் மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் 4, 5 குழந்தைகள் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். டாக்டர் ஒரு எம்.எல்., 10 எம்.ஜி. தன்மை உள்ள மருந்தை பரிந்துரைத்தால், ஒரு எம்.எல்., 100 எம்.ஜி., தன்மையுடைய மருந்து நான்கு வேளை கொடுத்தால் ஆபத்தில் முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'பழைய மருந்து இருந்தாலும்
டாக்டரிடம் காண்பிக்கணும்'
அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சசிக்குமார் கூறுகையில், ''குழந்தைகளின் வயது, எடைக்கு ஏற்ப டாக்டர் சிரப், டிராப்ஸ் என அளிப்பார். சிலர் காய்ச்சல் மருந்து வீட்டில் உள்ளது என சொல்கின்றனர். அவ்வாறு இருந்தால் டாக்டரிடம் காண்பித்து பயன்படுத்த வேண்டும். பாரசிட்டமால் பாட்டில்களை பொறுத்தவரையில், ஒவ்வொரு எம்.எல்.,அளவிலும் மருந்தின் தன்மை, அளவு வேறுபாடுகள் இருக்கும். ஒரு அளவுக்கு மேல் உடலால், அதன் தாக்கத்தை தாங்க இயலாமல் கல்லீரல் பாதிப்பு வரை ஏற்படலாம். பெற்றோர் மருந்துகளை கையாளும் போது, கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.

