/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடிகாலில் இருந்து துார்வாரிய கழிவு மண்; அகற்றாததால் இடையூறு!
/
வடிகாலில் இருந்து துார்வாரிய கழிவு மண்; அகற்றாததால் இடையூறு!
வடிகாலில் இருந்து துார்வாரிய கழிவு மண்; அகற்றாததால் இடையூறு!
வடிகாலில் இருந்து துார்வாரிய கழிவு மண்; அகற்றாததால் இடையூறு!
ADDED : மார் 17, 2025 12:11 AM

கழிவுமண்ணை அகற்றுங்க!
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் பள்ளி அருகே உள்ள ரோட்டில், கழிவு நீர் கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட, கழிவுமண் ரோட்டோரத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து விரைவாக அகற்ற வேண்டும்.
-- செந்தில்விஜய், பொள்ளாச்சி.
வேகத்தடையால் தொல்லை
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில், அமைக்கப்பட்டுள்ள சிறு வேகத்தடைகளால் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்களில் அழைத்து செல்லப்படும் நோயாளிகளும், வாகனங்களில் செல்வோர் அனைவரும் பாதிக்கின்றனர். இதை நெடுஞ்சாலைத்துறை கவனித்து சரி செய்ய வேண்டும்.
-- சுரேஷ், வால்பாறை.
ரோடு சேதம்
கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகே, ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் இதைக்கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-- கார்த்தி, கிணத்துக்கடவு.
மழை நீர் தேங்குது!
கிணத்துக்கடவில் கடந்த வாரம் பெய்த மழையால் சர்வீஸ் ரோட்டில், அரசு பள்ளி முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், மக்கள் ரோட்டில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகமோ அல்லது தேசிய நெடுஞ்சாலை துறையோ, மழை நீரை வெளியேற்றி, மறுபடியும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கண்ணன், கோவில்பாளையம்.
கழிவுகளால் துர்நாற்றம்
பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், காட்டம்பட்டி அருகே ரோட்டோர பள்ளத்தில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பை மூட்டைகளாக கட்டி வீசப்பட்டுள்ளது. இதனால், அங்கு துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதை உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- செல்வக்குமார், நெகமம்.
விபத்து அபாயம்
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லாமல் பயணிகளை ரோட்டிலேயே இறக்கி விடுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்திரசேகர், உடுமலை.
நடைபாதை சேதம்
உடுமலை, பைபாஸ் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு போடப்பட்ட நடைபாதை சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. தற்போது அப்பகுதி திறந்தவெளிக்கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.
- நாச்சிமுத்து, உடுமலை.
விபத்துகள் அதிகரிப்பு
உடுமலை, பழநி ரோடு அரசு உதவிபெறும் பள்ளி அருகே எதிர்புறம் அண்ணா குடியிருப்பிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை கடப்பதால் நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இவ்வாறு விபத்துகள் நடப்பது அதிகரிக்கிறது.
- பாலாஜி, உடுமலை.
ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு
உடுமலை, வ.உ.சி., வீதியில் நடைபாதையில் வணிக கடைகளின் பொருட்கள் வைத்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடமில்லாமல் ரோட்டில் செல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கும் வழியில்லாமல் போக்குவரத்து நெரிசலாகிறது.
- ஜீவானந்தம், உடுமலை.
இருளில் மூழ்கும் நகர்
உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் பலரும் தளி ரோட்டிலிருந்து கொழுமம் பிரிவு ரோடு வருவதற்கு அப்பகுதியை பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் அந்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால் திருட்டு பயமும் அதிகரிக்கிறது.
- குமார், உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை ஸ்ரீ நகர் செல்லும் ரோட்டில், மழை நீர் வடிகால் உள்ளது. இக்கால்வாய் துார்வாரப்படாததால், குப்பை தேங்கியுள்ளது. எனவே, இந்த வடிகாலை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.