sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்

/

நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்

நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்

நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்


ADDED : மே 14, 2025 11:28 PM

Google News

ADDED : மே 14, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மழை நீர்; உயிர் நீர்' என்பதற்கேற்ப, மழைநீரை சேமிக்க அரசும் ஏராளமான திட்டங்களை வகுக்கிறது. பொள்ளாச்சியில், கிராமங்கள் தோறும், குளம், குட்டைகள், அமைத்து மழைநீரை சேமிக்கும் பழக்கம், பண்டைய காலம் முதலே உள்ளது. இவை அனைத்துமே நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் பொக்கிஷங்கள் என்பதே நிதர்சனம்.

மழைநீரை சேமிக்கும் போது, நிலத்தடிநீர்மட்டம் உயர்கிறது. இதனால், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், போர்வெல்கள், மற்றும் உள்ளாட்சிகள் பராமரிப்பில் இருக்கும் நீராதாரங்கள், விவசாயத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் கைகொடுக்கின்றன.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 27; தெற்கு ஒன்றியத்தில், 17; ஆனைமலையில், 22; கிணத்துக்கடவில், 32 குளம், குட்டைகள் உள்ளன.

ஆனால், சமீப காலமாக நீர்நிலைகள் பெருபாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நீர் நிலைகளை சுற்றிலும் உள்ளவர்கள், அவரவர் பங்குக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், நீர்நிலைகள் சிறுத்து போயுள்ளன என்றால் மிகையாகாது.

காலப்போக்கில், குளம், குட்டைகள் கழிவுநீர் சங்கமிக்கும் இடங்களாக மாறி விட்டன. நகரப்பகுதியில் உள்ள நீரோடைகள் கழிவுநீர் ஓடைகளாகவே காட்சியளிக்கின்றன. நகரிலும், கிராமங்களிலும், நீர்நிலைகள் அனைத்தும் முட்புதர் சூழ்ந்தும், கழிவுநீர் தேங்கியும் அவலமாக காட்சியளிக்கின்றன.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இதனால், நீர்நிலைகளுக்கான சுவடே இல்லாமல் மாயமாகி வருகின்றன.

பல இடங்களில் நீர்நிலைகளை அழித்து, வீடுகளும், கட்டடங்களும் எழுப்பப்பட்டதால், நீர் சேகரமாகும் பகுதிகளின் பரப்பும் குறைந்து, அதிக மழை பொழியும் காலங்களில், தண்ணீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.

புதர் மயமானது


கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் அதிகளவு உள்ளன. சில ஊராட்சிகளில் நீர்நிலைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

இங்கு, மக்கள் குப்பையை வீசி செலவதுடன், சிலர் காலி மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவை கொட்டி செல்கின்றனர். இதனால் மழை நேரத்தில், நீர் தேங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.

ஆறுகளில் அசிங்கம்


ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, பல்வேறு குடிநீர்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முக்கிய நீர் ஆதாரமாக உள்ள ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது. இதற்குரிய தீர்வு காண வேண்டும் என, நீண்ட கால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாலாறும் தற்போது, கழிவுகளை வீசிச் செல்லும் இடமாக மாறியுள்ளது. பயன்படுத்தாத பொருட்கள், குப்பைகளை கொட்டி ஆற்றினை சீர்குலைத்து வருகின்றனர்.

மடத்துக்குளம், கொழுமம் பகுதியில், அமராவதி ஆற்று நீரே மாசுபடும் அளவுக்கு கரைகளில், குப்பை குவிக்கப்படுகிறது.

மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தாலும், இந்த கழிவுகள் கலந்து மாசடைகிறது. இந்த தண்ணீரை தான், சுத்திகரித்து மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்கின்றனர் என்பதை நினைக்கும் போதே, மனம் கனக்கிறது.

ஆற்றில் ஆக்கிரமிப்பு


வால்பாறையில், சோலையாறு அணையின் நீர் வழிப்பாதையில் ஆற்றை மறைத்து வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, வாழைத்தோட்டம், ஸ்டேன்மோர் ஆற்றுப்பாலம், சேடல்டேம், குரங்கு முடி பாரதிதாசன் நகர், சோலையாறு அணை இடது கரை, பெரியார் நகர் உள்ளிட்ட அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்தது வீடுகள், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. நீர்வளத்துறைக்கு சொந்தமான ஆற்றையே ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டினாலும், கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நிலையே உள்ளது.

நிதி ஒதுக்கீடு இல்லை


உடுமலை ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 118; மடத்துக்குளம் ஒன்றியத்தில், 74; குடிமங்கலம் ஒன்றியத்தில், 85க்கும் அதிகமான குளங்கள் உள்ளன.

இக்குளங்களுக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், நீர் வரத்து கிடைக்கும். குளங்களில் தேக்கி வைக்கப்படும் மழை நீரால் நிலத்தடிநீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு, விவசாயமும் செழிக்கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குளங்கள், தற்போது பாழாகி வருகிறது.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வேலை உறுதி திட்டத்தின் கீழ், குளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர் நிதி ஒதுக்கீடு இல்லாததால், பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. குளங்களின் கரைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்க எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்படும்,' என்றனர்.

'பார்' ஆனது


உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட, தினைக்குளம், செட்டிக்குளம், செங்குளம், பெரியகுளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், ஒட்டுக்குளம் மற்றும் வலையபாளையம் குளங்கள் உள்ளன.

ஏழு குளம் பாசன திட்டத்துக்குட்பட்ட ஒட்டுக்குளம், உடுமலை நகரின் அருகில் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரையில், கட்டுமான கழிவுகளை கொட்டுவது தொடர்கதையாக உள்ளது.

பெரியகுளம் உள்ளிட்ட குளங்களின் கரைகள் திறந்தவெளி 'பார்' ஆக மாற்றப்பட்டு, காலி மதுபாட்டில்கள் அப்பகுதி முழுவதும் வீசப்படுகிறது.

?

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:குளம், குட்டைகள், நீரோடைகள் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கழிவுகளை கொட்ட வேண்டாம் என அறிவுறுத்துவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. குளங்கள் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வால்பாறையில் நீர் பிடிப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நீர் ஆதாரத்தை காக்க முடியும்.உடுமலை, ஒட்டுக்குளம் கரையில் கட்டுமான கழிவுகள் கொட்டுவதை தடுக்க, தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ஒத்துழைப்புடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, கூறினர்.



- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us