/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கோடைக்கு கை கொடுக்கும்! தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்
/
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கோடைக்கு கை கொடுக்கும்! தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கோடைக்கு கை கொடுக்கும்! தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கோடைக்கு கை கொடுக்கும்! தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்
ADDED : ஏப் 02, 2025 07:54 PM

பொள்ளாச்சி; கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, நீர் வரத்து குறைந்த நிலையில், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்தாண்டு தொடர் மழையால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து தடையின்றி பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, கோடை வெயிலின் தாக்கம், மழை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து குறைவு போன்ற காரணங்களினால், நீர்மட்டம் வேகமாக சரிகிறது. சோலையாறு அணையில் மொத்தம் உள்ள, 160 அடியில், 1.98 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
பரம்பிக்குளம் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், 72 அடியில், நேற்று, 50.75 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு, 29 கனஅடி மட்டும் நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு, 1,220 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறு அணையில் இருப்பு வைக்கப்பட்ட நீர், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனம் மற்றும் குடிநீருக்கும் வழங்கப்படுகிறது. இதனால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து, 120 அடியில், 64.70 அடி நீர்மட்டம் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு, 314 கனஅடி நீர் வரத்தும், வினாடிக்கு, 569 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. நேற்று திடீரென மழை பெய்ததால், 8.2 மி.மீ., மழையளவு பதிவாகி இருந்தது.
அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வரும் சூழலில், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.பாசனம், குடிநீர் தேவைக்காகவும், ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட காரணங்களினால், நீர் இருப்பு குறைந்துள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், மேலும் நீரின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீர் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்தாண்டு இதே நாளில், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில், 2,837 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. நடப்பாண்டு, 8,814 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டை விட, 5,976 மில்லியன் கனஅடி நீர் இருப்பு அதிகமாக உள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் கடந்தாண்டை காட்டிலும் நீர் இருப்பு அதிகம் உள்ளது. அதனால், பாசனத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க முடியும். கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை,' என்றனர்.