/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணைகளில் சரிகிறது நீர்மட்டம் :பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
/
அணைகளில் சரிகிறது நீர்மட்டம் :பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
அணைகளில் சரிகிறது நீர்மட்டம் :பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
அணைகளில் சரிகிறது நீர்மட்டம் :பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
ADDED : மார் 15, 2024 12:46 AM

கோவை;சிறுவாணி, பில்லுார் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துவரும் நிலையில் பில்லுார்-1 திட்டத்தில் கூடுதல் குடிநீர், ஆழ்குழாய் கிணறுகள் அதிகரிப்பு போன்ற மாற்று நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி, பில்லுார் அணைகள் உள்ளன. தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணியின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. தற்போது மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம், 20 அடிக்கும் குறைவாக சரிந்துவிட்டது.
மாநகராட்சி பகுதிகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் இது முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் தினமும், 5 கோடி லிட்டருக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது பில்லுார் அணை கை கொடுத்துவருகிறது.
பில்லுார் அணை நீர் மட்டம், 100 அடி என்ற நிலையில் நேற்று, 62.75 அடியாக இருந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பில்லுார், 1, 2 குடிநீர் திட்டங்கள் வாயிலாக, 25 கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. பில்லுார்-3 குடிநீர் திட்டத்திலும்நாளொன்றுக்கு, 17.85 கோடி லிட்டர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு எடுக்கப்படுகிறது.
தற்போது மழை இல்லாததால் இரு அணைகளிலும் நீர் மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. பற்றாக்குறையை சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள் அதிகரிப்பு, அணைகளில் கூடுதலாக தண்ணீர் எடுப்பது போன்ற மாற்று நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
மாற்று நடவடிக்கை தீவிரம்!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
தற்போது, பில்லுார் அணையும் வறண்டு வருகிறது. சிறுவாணியிலும் குறைந்த அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. பில்லுார்-1 திட்டத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு, 2.9 கோடி லிட்டர் வழங்கப்படுகிறது. இதை, 5 கோடி லிட்டராக உயர்த்தி குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்டுள்ளோம்.
தற்போது, மொத்தம் 22 கோடி லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, 50 ஆழ்குழாய் கிணறுகள் கூடுதலாக அமைக்க உள்ளோம்.கூடுதலாக, 200 தண்ணீர் லாரிகளும் இயங்கி வருகின்றன. குழாய் உடைப்பு பாதிப்புகளை உடனடியாக சரி செய்யவும்உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்களும் குடிநீர் சிக்கனத்தை கையாள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மழையை நம்பி!
கடந்த காலங்களில், அப்பர் பவானி பகுதியில் மார்ச் மாதத்தில், 25 மி.மீ., ஏப்ரலில், 40 மி.மீ., மழை பெய்துள்ளது.மழை பெய்தால் பில்லுார் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

