ADDED : செப் 07, 2025 09:19 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு, 44 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த வாரம் அதிகளவு மழை பெய்துள்ளது. அதேநேரம், பொள்ளாச்சி பகுதியிலும் இளநீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
எனவே இந்த வாரம் இளநீர் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதன்படி 'ஈரியோபைட்' சிலந்திப்பூச்சி தாக்குதலுக்கு உரிய தடுப்பு முறைகளை கையாள வேண்டும்.
இல்லையெனில், சிலந்திப் பூச்சி தாக்குதல் உள்ள பகுதிகளில் இளநீரின் தரம் மிகவும் பாதிக்க வாய்ப்புள்ளது. தற்போது, வெள்ளைப் பூச்சியின் தாக்குதலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. விவசாயிகள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.