/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை; கூடுதல் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
/
மூன்று கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை; கூடுதல் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
மூன்று கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை; கூடுதல் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
மூன்று கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை; கூடுதல் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
ADDED : ஜூலை 21, 2025 10:26 PM
அன்னுார்; நல்லிசெட்டிபாளையம் வந்த கூடுதல் கலெக்டரிடம் கிராம மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
காரே கவுண்டன்பாளையம் ஊராட்சி, நல்லிசெட்டிபாளையத்தில், 12.5 ஏக்கர் பரப்பளவு உள்ள ஊர் குட்டை உள்ளது.இந்த குட்டையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றது. இதைத்தொடர்ந்து கோவையை சேர்ந்த 'மோல்டு மாஸ்டர்ஸ்,' என்னும் நிறுவனம் சமுதாய பொறுப்பு நிதியில் நிதி ஒதுக்கியது.
இதையடுத்து குளம் சீரமைப்பு பணி நேற்று பூமி பூஜை உடன் துவங்கியது.
கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வான் வாஹி பணியை துவக்கி வைத்து பேசுகையில், குளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
குளத்தில் நீர் நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும், என அறிவுறுத்தினார்.
இதையடுத்து நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் பேசுகையில், 'நல்லி செட்டிபாளையம், சாலையூர், குரும்பபாளையம் ஆகிய ஊர்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
இதற்கு தீர்வாக, குருக்கிளையம் பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த நீரேற்று நிலையத்தை பயன்படுத்தி, இந்த மூன்று கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.
நல்லிசெட்டிபாளையத்தில் உள்ள 12 ஏக்கர் குளத்திற்கு, வெறும் 1.5 இன்ச் அளவுள்ள குழாய் மட்டுமே அத்திக்கடவு திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் வரும் நீரால் எந்த காலத்திலும் குளம் நிரம்பாது. எனவே, பெரிய அளவிலான குழாய் பதித்து இந்த குளத்திற்கு தண்ணீர் விட வேண்டும்,' என்றனர்.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பேசுகையில், 'எங்கள் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் வேலைக்கு பதிவு செய்துள்ளோம். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக வேலை தரவில்லை. உடனே வேலை தர வேண்டும். நாங்கள் வறுமையில் வாடுகிறோம்,' என்றனர்.
நிகழ்வில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மணிகண்டன், செயலாளர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

