/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்புக்காக காத்திருக்கும் குடிநீர் திட்டம்
/
மின் இணைப்புக்காக காத்திருக்கும் குடிநீர் திட்டம்
ADDED : ஆக 20, 2025 09:41 PM

மேட்டுப்பாளையம்; சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் புதிய குடிநீர் திட்டம் நிறைவேறாமல் உள்ளது. பணிகள் முடிந்தபோதும் மின் இணைப்புக்காக மாதக் கணக்கில் இந்த குடிநீர் திட்டம் காத்திருக்கிறது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில், 30க்கும் மேற்பட்ட, நகர் குடியிருப்பு மற்றும் கிராம பகுதிகள் உள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தில், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவங்கின. இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க, வெள்ளிப்பாளையம் சாலையில், பவானி ஆற்றில் வட்டக் கிணறு (இன்டெக் வெல்) அமைக்கப்பட்டுள்ளது.
திட்டம் துவங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் பணிகள் முடிக்காமல், முழுமை அடையாமல் உள்ளது. அதனால் குடிநீர் திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும் என, பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தனிஅதிகாரிகள் கூறுகையில்,' குடிநீர் திட்டப் பணிகள் துவங்கிய போது, 20 ஹெச்.பி., மின் மோட்டார் இயக்க, மின்சார இணைப்பு பெறப்பட்டது. ஆனால் தற்போது, அதிக அளவில் தண்ணீர் பம்பிங் செய்ய இருப்பதால், 60 ஹெச்.பி., மின்மோட்டார் பொருத்த வேண்டி உள்ளது.
அதனால் புதிதாக, 60 ஹெச்.பி., மின் இணைப்பு வேண்டி, மின்சார அலுவலகத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. மின் இணைப்பு கிடைத்தவுடன், வெள்ளோட்டம் நடைபெறும். மின் இணைப்பு கிடைக்காததால் தான், இக்குடிநீர் திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இத்திட்டம் இயங்கும் போது, மூன்று நாட்களுக்கு ஒரு முறை, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்,' என்றனர்.