குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மூன்று நாட்களுக்கு குடிநீர் வராது
குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மூன்று நாட்களுக்கு குடிநீர் வராது
UPDATED : மே 08, 2026 10:49 PM
ADDED : மே 08, 2026 10:11 PM

மேட்டுப்பாளையம்: 'மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணிகள் நடப்பதால், மொத்தமுள்ள 33 வார்டுகளில், 10 வார்டுகளுக்கு, 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது' என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. சாமண்ணா நீரேற்று நிலையத்திலிருந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. மேல்நிலை தொட்டியில் இருந்து, நகரில் உள்ள 33 வார்டுகளில், பத்து வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியின் போது, பஸ்கள் நிற்கும் பகுதிகள், தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பிரதான குழாய், பகிர்மான குழாய்கள் வெளியே தெரிகின்றன. இவ்வழியாக பஸ்கள் சென்றால், குழாய்கள் உடைய வாய்ப்பு உள்ளது. அதனால் ஆழமாக குழி தோண்டி, அதில் குழாய்களை பதிக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக புதிதாக இரும்பு குழாய்கள் வாங்கப்பட்டன. குழாய்களை பதிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம், இன்று துவக்க உள்ளது. பணிகள், 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கின்றன. இதனால் எல்.எஸ்.புரம், சேரன் வீதி, ரங்கையா வீதி, பாக்குக்கார வீதி, அண்ணாஜி ராவ் ரோடு, எக்ஸ்டென்ஷன் வீதிகள், எம். எஸ்.ஆர்., புரம், பங்களா மேடு, மொக்கை ராஜபுரம், அன்னுார் பிரதான சாலை, காந்திபுரம், ஜி.எம். ஆர்.சி., பள்ளி சாலை, கிறிஸ்டியன் காலனி, பாரத் பவன் ரோடு ஆகிய பகுதிகளுக்கு, மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது; எனவே, தண்ணீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
