/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
ADDED : மார் 20, 2025 11:21 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் ரோட்டில், அதிக அழுத்தம் காரணமாக, பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு, ஆழியாறு ஆற்றில், அம்பராம்பாளையத்தில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய் வாயிலாக எடுத்துவரப்பட்டு, மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வழியாக, மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குழாய் வாயிலாக, அந்தந்த வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதி, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அவ்வப்போது, ஆங்காங்கே குழாய் உடைப்பு, கசிவு காரணமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
இந்நிலையில், வெங்கட்ரமணன் ரோட்டில், அதிக அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர், ரோட்டில் வழிந்தோடுகிறது. நகராட்சி சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்படவில்லை.
பொதுமக்கள் கூறியதாவது:
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலும், அதனை விரைந்து சீரமைக்க, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைப்பு காரணமாக, குடிநீர் வீணாவதோடு, ரோடும் சேதமடைகிறது. வாகன ஓட்டுநர்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.