/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீர்வழிப் பாதை அளவீடு
/
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீர்வழிப் பாதை அளவீடு
ADDED : ஜன 28, 2025 06:33 AM
கோவில்பாளையம் : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கீரணத்தத்தில், நீர்வழி பாதை அளவீடு செய்யப்பட்டது.
கோவையை அடுத்த கீரணத்தத்தில், கரிய காளியம்மன் கோவில் அருகே, நீர்வழிப் பாதை (ஓடை) உள்ளது. இதை பாதுகாக்க வேண்டும் என்று கோரி, ஊர் பொதுமக்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம் 27ம் தேதி, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி, வருவாய் துறை மற்றும் நில அளவைத் துறை இணைந்து கூட்டு புலத் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தன், தாலுகா சர்வேயர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நில அளவைத் துறை ஊழியர்கள், நீர்வழிப் பாதையை நேற்று அளவீடு செய்தனர்.
இதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், எஸ்.ஐ., கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
'அளவீடு முடிந்ததையடுத்து அளவீடு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

