/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்சியில் பங்கு தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை: கோவையில் வைகோ பேட்டி
/
ஆட்சியில் பங்கு தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை: கோவையில் வைகோ பேட்டி
ஆட்சியில் பங்கு தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை: கோவையில் வைகோ பேட்டி
ஆட்சியில் பங்கு தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை: கோவையில் வைகோ பேட்டி
ADDED : நவ 20, 2025 05:44 AM

கோவை: கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்ததன் வாயிலாக, மத்திய பா.ஜ., அரசு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளதாக, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
போதை ஒழிப்பு, ஜாதி மோதல் தடுப்பு வலியுறுத்தி, ஜன., 2 முதல் 12ம் தேதி வரை, திருச்சி - மதுரைக்கு ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். இதில், பங்கேற்கும் இளைஞர்களை தேர்வு செய்யும் நிகழ்வு, கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயிலை, மத்திய பா.ஜ., அரசு திடீரென ரத்து செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 20 லட்சத்துக்கு குறைவாக, மக்கள் தொகை இருப்பதாக காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, குறைவான மக்கள் தொகை என கணக்கிட்டுள்ளனர். அந்தாண்டில், 15 லட்சம் மக்கள் தொகை இருந்தது. ஆனால், தற்போது கோவையில் 21.36 லட்சம் மக்கள் உள்ளனர். இதை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட கொச்சி, விசாகபட்டினம் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிலும், ஆக்ரா, போபால், பாட்னா நகரங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக, மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்து, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. இந்த முடிவை திரும்ப பெற வேண்டும். திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு, கோவையில் ம.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஜனநாயக மோசடி வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியின் வாயிலாக, பெரிய ஜனநாயக மோசடி செய்ய உள்ளனர்.
இதில் தேர்தல் கமிஷனின் போக்கு, ஒரு சார்பாக உள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்த கோரி, ம.தி.மு.க., சார்பிலும் கோர்ட்டில், வாதம் முன் வைக்க உள்ளோம். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்த, அரசு முன்வர வேண்டும். மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைப்பதால், எந்த பிரயோஜனமும் இல்லை.
போதை பொருள் கடத்தி விற்பவர்களை தண்டிக்கும் வகையில், சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும். 2026 தேர்தலுக்கு பிறகு, தி.மு.க., ஆட்சி தொடர, ஆதரவு அளிப்போம். ஆட்சியில் பங்கு தொடர்பாக, பிற கட்சியினர் பேசியிருக்கலாம்; நாங்கள் எதுவும் பேசவில்லை.
இவ்வாறு, வைகோ கூறினார்.

