ADDED : ஜூன் 11, 2025 07:40 PM

நாகரத்தினம், சூளேஸ்வரன்பட்டி: நகரம் மற்றும் கிராமங்களில், துாய்மை பாதுகாக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக, மத்திய, மாநில அரசு சார்பில் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால், திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும். குப்பையை திறந்தவெளியில் வீசுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கும், மக்காத கழிவை தரம் பிரித்தலை, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பிரேம்குமார், நெகமம்: தூய்மை பணியாளர்கள், வீடுவீடாக சென்று குப்பையை சேகரிக்கின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே குப்பையை தரம் பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கின்றனர். மக்கும் குப்பையை உரமாக மாற்றுகின்றனர். பல இடங்களில் குப்பை பொதுவெளியில் குவித்து பணியாளர்களே தீ வைக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குப்பையை தரம் பிரிக்காத ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், வால்பாறை: வால்பாறை நகரில் உள்ள திறந்தவெளி குப்பைக்கிடங்கால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குப்பைக்கிடங்கு அருகில் உள்ள கல்லுாரி மாணவர்கள், துர்நாற்றத்தால் பாதிக்கின்றனர். சுகாதாரத்தை பாதுகாக்க நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், குப்பையை பாதுகாப்பான முறையில் சேமித்து, உரம் தயாரிக்க வேண்டும்.
சந்திரமோகன், உடுமலை: கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பெயரளவில் தான் உள்ளது. துாய்மை பணியாளர்கள் குறைவாக இருப்பதால், வீடுகள் தோறும் குப்பை சேகரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், சேகரிக்கப்படும் குப்பை நீர்நிலைகளின் அருகில் குவிக்கப்படுகிறது. குப்பையை தரம்பிரிப்பதற்கு பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.