ADDED : மே 14, 2025 11:30 PM

நாகராஜன், தொழில் முனைவோர், உடுமலை: நிலத்தடி நீர் மட்டத்துக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கும் குளங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் குளங்களின் பராமரிப்பில் தொடர் அலட்சியம் காட்டுவது வேதனையளிக்கிறது. குளங்களிலும், நீர்வழித்தடங்களிலும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித்துறையினரும், தன்னார்வ அமைப்பினரும் இணைந்து குளங்களை பாதுகாக்க வேண்டும்.
மணிகண்டன், செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பொள்ளாச்சி: குளம், குட்டைகள் பராமரிப்பின்றி உள்ளன. ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் மாயமாகியுள்ளன. ஒரு சில இடங்களில் கழிவுகள் கொட்டுமிடமாக மாறியுள்ளது. கோடை காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவும், ஆழப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார், தனியார் நிறுவன மேலாளர், நெகமம்: கிணத்துக்கடவு, நெகமம் சுற்று பகுதியில் அதிகமாக விளைநிலங்கள் உள்ளது. இப்பகுதிகளில் ஏராளமாக குளம், குட்டை, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளது. இதில், பெரும்பாலானவைகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. வரும் காலத்தில், மழை நீரை முழுமையாக சேமிக்க, நீர்நிலைகளை துார்வாரி, பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், இயற்கை ஆர்வலர், வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணையின் நீர் வழித்தடங்களில் வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. நீர்வழித்தட ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் அளவீடு செய்து, மீட்க வேண்டும். இதன் வாயிலாக, மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கலாம்.